பதிகம் - (கதை பொதி பாட்டு)


   நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு
   ஆய்வளை ஆபுத் திரனா டடைந்ததும்
   ஆங்கவன் றன்னோ டணியிழை போகி
   ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்
85 உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப்
   பொற்கொடி வஞ்சியிற் பொருந்திய வண்ணமும்
   நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
   சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்
   ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
90 பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
   புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து
   மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
   தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
   பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும்
95 இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
   வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
   மாவண் தமிழ்த்திறம் மணிமே கலை துறவு
   ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்.

உரை

1--8. இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து-கதிர்களையுடைய இளஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடைய, விளங்கு ஒளி மேனிவிரிசடையாட்டி-விளங்குகின்ற ஒளிபொருந்திய திருமேனியும் விரிந்த சடையுமுடையாளும், பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி-விளங்குகின்ற பெரிய பொன்மலையாகிய மேருவின் உச்சியில் தோன்றி, தென்திசைப்பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்- தென்றிசைக்கண் போந்த நாவலந்தீவின் காவற்றெய்வமும், சாகைச் சம்புதன் கீழ்நின்று-கிளைகளையுடைய நாவன்மரத்தின் கீழிருந்து, மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு-பெருமை பொருந்திய நிலமகட்கு நேரும் துன்பத்தினைக் கேட்டு, வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற-கொடிய வலியினையுடைய அரக்கர்கட்கு வெவ்விய பகையாக நோற்றவளுமாய, சம்பு என்பாள் சம்பாபதியினள்-சம்பு என்பவள் சம்பாபதியினிடத்தே இருந்தனள் ;

   எள்ளும்: உவமவுருமாம். பகை நோற்ற-பகையாக நோற்ற. சம்பு வென்பாள்: வட சொல்லாகலின் உடம்படுமெய் பெற்றது. சம்பாபதி-காவிரிப்பூம்பட்டினத்தின் வேறு பெயர். சம்பாபதியினள் : முற்று ; ஆக என்பது விரித்து எச்சப்படுத்தலுமாம்.