பட்டன. அதன்பின் முதல் ஐந்து இலம்பகம் மூலம் மட்டும் ப.அரங்கசாமி பிள்ளை அவர்களால் கி.பி.1883 இல் பதித்து வெளியிடப்பட்டது. கி.பி. 1887 இல் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் நூல் முழுவதும் நச்சினார்க்கினியர் உரையுடன் பதித்து வெளியிட்டனர். அப் பதிப்பு மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது. கி.பி. 1941 இல் சைவசித்தாந்த மகா சமாசம் இந்நூல் மூலம் மட்டும் பதித்து வெளியிட்டுள்ளது.
இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் நல்லுரை கண்டார் முதலில். அன்றுமுதல் இன்றுவரை அவ்வுரையே புலவர்கள் ஆய்ந்து பொருள்கண்டு வந்தனர் - வருகின்றனர் - வருவார். நச்சினார்க்கினியர் உரை சிறந்தது; தெளிவுடையது; நூலாசிரியர் கருத்தை நுணுக்கமாக எடுத்துக்காட்டுவது; புலவர்கள் எவரும் போற்றத் தக்கது என்பது மறுக்கமுடியாத உண்மையாம். ஆயினும் அஃது இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்பது காண இயலாத பொழிப்புரை; முறையான பொழிப்புரையும் அன்று; சுருக்கமாக உரை வரைந்துசெல்லும் இடங்களும் உள்ளன. இரு பாடல்களையும் இணைத்து மேல் கீழாக மாற்றி யுரை வரைந்திருப்பதும் காணலாம். பல பாடல்களைச் சேர்த்து மாட்டேற்றாக ஒரு பாடலில் இருக்கும் சொல்லை மற்றொரு பாடலுக்குக் கொண்டு கூட்டி யுரை வரைந்திருக்கும் இடங்களும் பல இருக்கின்றன. எவ்வாறு சொற்குப் பொருள்காண இயலும்? இவ்வுரை சிறந்த புலவர்கட்கே பொருத்தமானது. புலவர்களும் ஆய்ந்து காணும் அருமையுடையது; இளமை மாணவர் எளிதிற் பொருள் காண இயலாத தொன்று. நச்சினார்க்கினியர் உரையின் அருமை நாவலர்க்கெல்லாம் நன்கு தெரியும். அதனை எளிய புலவர் எங்ஙனம் பயில்வார்? இளைஞர்க்கு ஏற்ற வுரையும் அன்று.
இக்காலத்து இளைஞர்கள் எல்லா நூல்களுக்கும் எளிதிற் பொருள் காண முயல்கின்றார்கள் என்பதும், நச்சினார்க்கினியருரை நயத்தைக் கூறக்கேட்டு மெச்சுவாரேயன்றிக் கற்க நச்சுவார் எவரும் இலர் என்பதும் நாம் அறிந்தோம். சொற்பொருளும் விளக்கவுரையும் இந்நூலுக்கு எழுதிப் பதித்தால் எளியபுலவரும் இளைஞரும் கற்று நற்பயனடைவர் என ஆய்ந்தோம். எளிய உரைநடையிற் பொருளும் விளக்கமும் எழுதிக் தரும்படி