யாய்ந்து விளக்கியிருப்பது பெரும் பயன் விளைக்கத்தக்கது. உயர்திரு. புலவர் பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் வரைந்த கதைச் சுருக்கம் கற்பவர்க்கு வழிகாட்டியாகத் துணைபுரிகின்றது. வேண்டும் இடங்கட்குக் குறிப்புரை எழுதி வேண்டா இடங்களை விடுத்துச் செல்வது மிகவும் நலம்பயப்பதாம். இலக்கணக் குறிப்பும், மேற்கோளும் எடுத்துக் காட்டியிருப்பது வித்துவான் புலவர் வகுப்புக்கட்குச் செல்லும் மாணவர்க்குப் பெரிதும் துணைபுரியும் என்பதிற் சிறிதும் ஐயமின்று. செய்யுளும் உரையும் பிழையின்றிச் சீர்திருத்தமாகத் தொகுத்துப் பதித்திருக்கும் முறையும் புத்தகம் கட்டப்பட்டிருக்கும் முறையும் கண்டோர் இதன் அருமை பெருமையையுணர்வார். இக்கால மாணவர்கட்கு ஏற்றவாறு ஆக்கியது இது.
புலவர் வகுப்பு, வித்துவான் வகுப்பு ஆகிய தேர்வுகட்குச் சிந்தாமணி பாடமாக இருந்தால் தனியே படித்துத் தேர்வுக்குச் செல்லத்தக்க துணையாகும் இது. நச்சினார்க்கினிய ருரையை எளிதில் அறிந்துகொள்ள உதவும். இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்பதை எடுத்துக்காட்டும் இவ்வுரை. இடர்ப்பாடின்றிப் பொருளை எளிதில் உணர்ந்துகொள்ளலாம். செய்யுளைப் படித்து மனப்பாடஞ் செய்வோர்க்குச் சீர் பிரித்துக் காட்டியிருப்பது பெரிதும் உதவியாம். பெரும்புலவராக வருங் குறிக்கோள் உடையவர் எவரும் சிந்தாமணியைச் சிறப்பாகக் கற்றுப் பின் மற்றை நூல்களைக் கற்பதே நன்முறையாகும்.
சிந்தாமணி என்ற இந்நூலின் பொருளை எல்லாரும் உணர்ந்து உலகவாழ்வின் உண்மை தெரிந்து அறநெறியும் மறநெறியும் கண்டு நல்வாழ் வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். அந் நோக்கத்தால் இதற்கு முன்னும் சிந்தாமணி வசனம், சிந்தாமணிச் சுருக்கம், சிந்தாமணி யாராய்ச்சி என்ற நூல்களைப் பதித்து வெளியிட்டனர். இன்றும் இந்நூற்கு எளிய இனிய உரைநடையில் சொற்பொருள், விளக்கம், குறிப்புரை வரைந்து பெரும் புத்தகமாக வெளியிடுகின்றோம்.
தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் இந்நூலை வாங்கிக் கற்றும் கற்பித்தும் நற்பயன் எய்துவார்கள் என நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
|