ஊர்புனற் குடைந்ததே போல்; ஆடியுட் பாவைபோல்; சீருறு சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட சிங்கம்' என்றின்னோரன்ன தீஞ்சொற் றொடைகள் இடந்தொறும் இடந்தொறுங் காணப்பட்டுக் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குவனவாம்.
இனி, சீவகசிந்தாமணியின்கண் சங்க இலக்கியங்களின் நலமெல்லாம் தகுந்த தகுந்த இடங்களிலே பொருத்தி அழகு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழருடைய ஒப்பற்ற நூலாகிய திருக்குறளைத் தகுந்த இடமறிந்து வித்தகம்படக் கையாண்டுள்ள திறத்திலே இச் சீவக சிந்தாமணியே தலைசிறந்து திகழ்கின்றது. தேவர் தமது இலக்கியத்திற்குத் திருக்குறளையே உயிராக அமைத்திருக்கின்றனர். மற்றும் பாட்டும் தொகையுமாகிய ஏனைய சங்க நூல்களினின்றும் எடுக்கப்பட்ட பொருளும் சொல்லும் சிந்தாமணியில் மிக நயமாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் சிந்தாமணியின்கண் பண்டைக்காலத்து இலக்கிய நெறியாகிய அகப்புறப் பொருள் நெறிகள் பெரிதும் போற்றப்பட்டிருக்கின்றன. இக்காரணத்தால் பண்டைய உரையாசிரியன்மார்க்கெல்லாம் சிந்தாமணி ஒரு சிறந்த எடுத்துக் காட்டு நூலாகவும் திகழ்வதாயிற்று.
இனி, கவிவரர் சுப்பிரமணிய பாரதியார் "திறமுடைய புலமை எனிற் பிற நாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்று பாடியதற்கிணங்க நமது சிந்தாமணியை ஓதியுணர்ந்த பிறநாட்டறிஞர் அதுபற்றிக் கூறும் பாராட்டுரை ஒரு சில காட்டுதும் ; காண்மின்.
|