சிந்தாமணி ஒரு சமணக் காப்பியமட்டுமன்று ; தமிழ்ப் பெருங்காப்பியமட்டும் அன்று. அஃது உலகப் பெருங் காப்பியங்களிலே ஒன்று என்று பிற நாட்டாரானும் பாராட்டப்பட்டது நமது சீவக சிந்தாமணி என்க.
சீவக சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்துணரின் அது திருமால் சமயத்தவர் கதைகளில் ஒன்றாகிய கண்ணன் கதையையே பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். சீவகனைக் கண்ணனாகவும் விசயையைத் தேவகியாகவும் சுநந்தையை யசோதையாகவும் சச்சந்தனை வசுதேவனாகவும் கந்துகனை நந்தகோனாகவும் கட்டியங்காரனைக் கஞ்சனாகவும் கொண்டு கதை நிகழ்ச்சிகளையும் நோக்கின் சீவகன் கதை கண்ணன் கதையையே அடியொற்றி நடத்தல் காணலாம்.
உலகத்திலே பற்றின்றியே எல்லாத் தொழிலினும் ஈடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம் என்பதற்குக் கண்ணன் கதை ஓர் எடுத்துக்காட்டாகும். கண்ணன் ஆயமகளிரோடு காம விளையாட்டுப் பல நிகழ்த்தினன் ; போர் செய்தான் ; அரசாட்சி செய்தான் ; அன்பர்க்கு உதவினான் ; மன்னுயிர் ஓம்பினான். இத்தனை தொழில்களும் செய்துகொண்டே அவன் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்தினன் என்பதுதான் கண்ணன்பால் யாம் காணும் பெருந்தகைமை. இப்படிப்பட்டதொரு கதைத் தலைவனையுடைய கதை நமது சமயச்சார்பாக இருத்தல் நன்றென்று கருதிய ஆருகதச்சான்றோர் ஒருவரே அந்தக் கதையை அடியொற்றிச் சீவகன் கதையைப் படைத்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. முதன் முதலாக இந்தக் கதையைப் படைத்தவர் யார் ? எக்காலத்தவர்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியவில்லை. மிகப் பழைய காலந்தொட்டே ஆருகத சமயச்சார்பாக இந்தக் கதை வழங்கிவந்துள்ளது என்றுமட்டும் தெரிகிறது. இந்தக் கதையைப் பொருளாகக் கொண்டு திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை இயற்றியருளினர். சீவக சிந்தாமணி தோன்றியபின்னர், வடமொழியிலும் இந்தக் கதை நூல்வடிவத்திலே தோன்றிற்று. வடமொழியிலே சீவகன் கதை பொருளாகத் தோன்றிய நூல்கள் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தர நாடகம், சீவந்தரசம்பு என்பனவாம். மகாபுராணத்திலும், சீபுராணத்திலும் (மணிப் பிரவாள நடையில்) இக்கதை கூறப்பட்டிருக்கின்றது.
ஆராய்ச்சியாளர் சிலர் சீவக சிந்தாமணி கத்திய சிந்தாமணியின் வழிவந்தது என்று கருதி, கத்திய சிந்தாமணியின் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டை யடுத்து இந்நூல் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். சீவகசிந்தாமணியின்