அணிந்துரை 17 

தகுதியாகாது. ஆருகத சமயத்தின் பொற்காலம் கடைச்சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னும் தேவாரகாலமாகிய ஏழாம் நூற்றாண்டின் முன்னும் ஆகிய ஏறக்குறைய நானூறு ஐந்நூறு ஆணடுகளேயாகும். இந்தக் காலத்தைக் காவியக்காலம் என்றும் கூறலாம். பெருங்கதையும் ஒப்பற்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிந்தாமணியும் பிறவுமாகிய மிகச் சிறந்த பெருங்காப்பியங்கள் இந்தக் காலத்திலே தான் தோன்றின. சமணசமயச் சான்றோராகிய கொங்குவேளிரே முதன்முதலாகக் காவியங்கட்குக் கால்கோள் விழாச் செய்தவர் ஆவர். கொங்குவேளிரும் இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும் பண்டைய அகப்புற நெறித் தமிழிலக்கிய மரபினின்றும் காவிய நெறியைக் காட்டி ஒரு புரட்சி அல்லது புதுமையைத் தோற்றுவித்தனர். இம் மூவரும் செய்யுள்நடைத் திறத்தில் பண்டைய மரபினையே பின்பற்றிக் காவியம் செய்தனர். திருத்தக்கதேவர் அந்தப் புதுமையின் மேலும் ஒரு புதுமை செய்தனர். பழைய செய்யுட் போக்கையும் மாற்றிப் புதியதொரு நெறியைப் படைத்துக் கொண்டுவிட்டனர். தேவர்க்குப் பின் இற்றைநாள்காறும் நந்தமிழன்னை தேவர் காட்டிய அப்புது நெறி பற்றியே இனிதின் நடப்பாளாயினள்.

தேவர்க்குப் பின்னர், காலப்போக்கிலே தோன்றிய நல்லிசைப் புலவர் பலரும் தேவருடைய அடிச்சுவடுபற்றியே பெரிய - சிறிய - வனப்பு நூல்களைப் படைத்தளிப்பாராயினர்; சிந்தாமணிக்குப்பின் தோன்றித் தமிழகத்திலே சிறப்புற்றுத் திகழும் இலக்கியமனைத்தினும் சீவக சிந்தாமணியின் நறுந் தமிழ்மணம் விரவியிருத்தலைக் காணலாம். தேவர் நெறிபற்றிக் காப்பியமியற்றிய நல்லிசைப் புலவர்களில் கம்பநாடரே தலைசிறந்தவர் என்னலாம். கம்பநாடரின் பெரும் புகழுக்குத் திருத்தக்கதேவர் செய்தருளிய சீவக சிந்தாமணியும் ஒரு காரணம் என்பது மிகையன்று.

இனி, திருத்தக்கதேவர் தாம் மேற்கொண்டிருந்த துறவு நெறிக்குத் தகத் தமது இளமையிலேயே இயற்றிய சிறு நூலாகிய நரிவிருத்தம் தன்னகத்தே அரிய மணிகள் பலவற்றைக்கொண்டு திகழ்கின்றது. நரி விருத்தத்திலே ஒரு பாட்டு நந்தேவர் சீவக சிந்தாமணியைச் செய்தருளியதற்குரிய காரணத்தைக் குறிப்பாகத் திறம்பட வுணர்த்துகின்றது. அது,

  "பற்றுளம் அகல நீக்கிப் பாசிழைப் பரவை யல்குற்
பொற்றொடி மகளிர் தங்கள் புணர்முலைக் குவட்டின் வைகிச்
சுற்றத்தார் சுற்ற வாழ்தலன்றெனின் துறந்து போகி
நற்றவம் புரிவில் லாதார் நடலை நோய்க் கடலுள் ஆழ்ந்தார்."


(நரி விருத்தம் : 38)