அணிந்துரை 19 

அவலச்சுவைக்கு உறைவிடமான பகுதியை நான் வேறெந்தக் காப்பியத்தினும் கண்டதில்லை. இந்தப் பகுதியை நினைத்தாலே என் கண்ணில் தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய்வது அநுபவத்தாற் கண்ட வுண்மை. இந்தச் சுவையே கற்போருளத்தே காலூன்றி நின்று இந்தக் காவிய முழுதிற்கும் சுவை பயந்து நிற்கின்றது. பின்னர் யாண்டும் பெரும்பாலும் காமச்சுவையே பேசிக் களிப்பூட்டக் கருதிய தேவர் இந்த நூலின் முதலிலம்பகத்திலேயே ஒப்பற்ற அவலச் சுவையைத் தேக்கி வைத்திருப்பது அவருடைய தெய்வத்தன்மையுடைய புலமைத் திறத்தை நன்கு விளக்குகின்றது.

இனி இந்த நூலிலே காமநெறி படர்ந்து கேடுறுவார்க்கு எடுத்துக்காட்டாகக் கதைத் தலைவன் தந்தையாகிய சச்சந்தனே அமைகின்றனன். மற்றுச் சுடுகாட்டிலே பிறந்த நம்பியோ பல்வேறு மகளிர்களை மணந்தும் பற்றுள்ளம் அகல நீக்கியே வாழும் திறத்திற்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான். சீவகன் வரலாற்றிலே அவன் செயல் பலவற்றினும் அவனுடைய இந்த மேதகவு விளங்குவதை அங்கங்கே காணலாம்.

சீவகனுடைய நல்லாசிரியராகிய அச்சணந்தி அவனுடைய மனப்பரிபாகத்தை நன்குணர்ந்தே அவனுடைய இளமைப் பருவத்திலேயே காஞ்சிப் பொருளாகிய நிலையாமையை உணர்த்தி விடுகின்றனர். மேலும், அவன் பகைவனாகிய கட்டியங்காரன்பால் ஓராண்டு முடியுந்துணையும் வெகுளல் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றனர். ஆசிரியரின் வேண்டுகோட்கிணங்கிய சீவகன் சிங்கத்தைக் குறுநரிக்குழாம் வளைந்தாற்போன்று தன்னைச் சூழ்ந்துகொண்ட கட்டியங்காரன் ஏவலர்க்கடங்கிச் செல்கின்றனன். இந் நிகழ்ச்சியால் சீவகன் வெகுளியைத் தன் அறிவின் ஆட்சிக்குள்ளே அடக்கியவன் என்பது புலனாம். மற்றும் சீவகன் ஊழ்தர உழுவலன்போடு வந்த குலமகளிர் பாலன்றி யாண்டும் காமத்தாலே நெஞ்சு நெகிழ்ந்திலன் என்பதையும் இந்நூலில் யாண்டுங் காணலாம். அவன் மிக்க இளமைப் பருவத்திலேயே தனக்குப் பரிசிலாக நந்தகோனால் வழங்கப்பட்ட பேரழகியாகிய கோவிந்தையாரை மனைவியாக ஏற்றுக்கொள்ளாமை அவன் காமத்தையும் தன் அறிவின் ஆட்சிக்குட்படுத்தியவன் என்பதை நன்கு விளக்கும். காட்டகத்தே தன்னைக் கண்டு காமுற்றுக் குறிஞ்சிப்பூங் கோதைபோலும் குங்கும முலையினாளாகிய அநங்கமாவீணை என்பாள், காமனம்பு வீசுமுன்பே கண்ணம்பை வீசியகாலத்தே அவளை நோக்கவும் நடுங்கினான் சீவகன். இஃது அவன் ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. சீவகன் மன்னுயிரையும் தன்னுயிரென எண்ணும் அருட்கடல்