அணிந்துரை 20

என்பதற்குக் காட்டுத்தீயால் வளைப்புண்ட யானைகளைக் காப்பாற்றினதும் நாய்க்கு மறைமொழி செவியுறுத்தி நற்கதியுய்த்ததும், கட்டியங்காரன் பரிசனங்கட்குப் பரிந்து விருத்தி நல்கியதும், இன்னோரன்ன பற்பல சான்றுகள் உள்ளன. சீவகனுடைய மொழிகள் பற்பல விடங்களிலே மெய்க்காட்சிகளின் விளக்கமாக விருக்கின்றன. இவ்வாறு இச் சிந்தாமணி, பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனைத் தலைவனாகக் கொண்டு கற்போருக்குக் கழிபேரின்பமும் சிறந்த உறுதிப் பொருளும் வழங்கும் ஒரு சிறந்த வனப்பு நூலாகவே திகழ்கின்றது.

இனி, இச் சீவக சிந்தாமணி தொடக்கத்திலே மழையின்றி மாநிலத்ததார்க்கில்லை என்பதுபற்றி மழைவளம் பேசத் தொடங்குகின்றது. சிந்தாமணியிலே காணப்படுகின்ற ஏமாங்கத நாடு நன்னாட்டிற்கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. வளமிக்க உழவர் ஆரவாரம் எங்கெங்கும் கேட்கப்படுகிறது. "காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து, தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங்கதப் பெருநாட்டின் புகழ்" திசை யெலாம் பரவுகின்றது. அந்நாட்டு மன்னனோ நாவீற்றிருந்த புலமாமகளோடு நன்பொற் பூவீற்றிருந்த திருமகள் புல்ல நாளும் பாவீற்றிருந்த கலை பாரறச்சென்ற கேள்விக் கோவாகத் திகழ்கின்றான். ‘தள்ளா விளையுளு தக்காரும் தாழ்விலாச், செல்வருஞ் சேர்வது நாடு’ என்னுந் திருக்குறட்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது ஏமாங்கதநாடு. இந்த நாடு தரும் இன்பம் எல்லையற்றதாகும். சிந்தாமணிக்குப் பின்னர்க் காப்பியஞ் செய்த நல்லிசைப்புலவர் நாட்டுகின்ற நாடுகள் எல்லாம் இந்த ஏமாங்கதத்தின் வழிவழித் தோன்றிய நாடுகளேயாம்.

நல்வாழ்க்கைக்குக் கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. இவற்றோடு குடிதழீஇக் கோலோச்சும் கொற்றவனும் வேண்டும் என்னும் உண்மையைச் சீவகசிந்தாமணி தொடக்கச் செய்யுள் ஒன்றிலேயே அறுதியிட்டுக் கூறுகின்றது. நாவீற்றிருந்த புலமாமகள் என்பது அறிவுச் செல்வத்தை உணர்த்துகின்றது. பொற்பூ வீற்றிருந்த திருமாமகள் என்பது செல்வத்தை உணர்த்தும். கேள்விக்கோ என்றது செங்கோன் மன்னனைக் குறிக்கும். இவ்வாறு சிந்தாமணியிலே மாந்தர் வாழ்க்கைக்குச் சிறந்த நன்னாடு மிக அழகாகப் படைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அரசியல் நெறியும் போர்நெறியும் பிறவும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்க்கையின் மாண்பு விரித்தோதப்பட்டிருக்கின்றது. சுருங்கக் கூறுமிடத்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புவோர்க்கெல்லாம் இன்றியமையாத