கடவுள் வாழ்த்து

1.

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்

  திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.

      (இச்செய்யுள் தொல்காப்பியத்திற்கு இளம்பூரண வடிகளார்
வகுத்த உரையின்கட் கண்டது.)

இதன் பொருள் : உலகம் மூன்றும் - மூன்றுலகத்துள்ளும்
வாழும் சான்றோரனைவரும் ஒருங்கு உடன் ஏத்தும் - ஒருசேர
வாழ்த்தி வணங்குவதற்குக் காரணமான; மாண் திலகம் ஆய -
மாட்சிமை மிக்க திலகமாகத் திகழா நின்ற; திறல் அறிவன் -
ஆற்றன் மிக்க முற்றறிவினையுடைய அருகக் கடவுளின்; அடி -
திருவடிகளை தொலவினை நீங்குக என்று என்னுடை பழவினைகள்
துவரக்கெடுவனவாக என்று கருதியும்; யான் வழுவுஇல் நெஞ்சொடு
- யான் காம முதலிய குற்றங்களில்லாத தூய நெஞ்சத்தோடிருந்து;
வாலிதின் ஆற்றவும் - அதற்குக் காரணமான நோன்பினைத்
தூய்தாகப்பண்ணவும்; தொழுவல் - என் மன மொழி மெய்களாலே
தொழுது வழிபடுவேன் என்பதாம்.

(விளக்கம்) மூன்றுலகத்தும் வாழும் நல்லோர் ஒருங்கே
வாழ்த்தி வணங்குதற்குக் காரணமான பெருஞ் சிறப்புடைய அருகக்
கடவுளின் திருவடிகளை அடியேன் பழவினை கெடும் பொருட்டும்,
அவை கெடும் பொருட்டுக் குற்றத் தீர்த்த நன்னர்
நெஞ்சத்தோடிருந்து தூய்தாக அவன் கூறிய நல்லறங்களை
மேற்கொண்டொழுகவும் திருவருள் கூர்தல் வேண்டும் என்று
வணங்குகின்றேன் என்றவாறு.

மூன்றுலகம் என்பது மேலுலகும் நிலவுலகும் கீழுலகுமாம்,
இவற்றை ஒளியுலகம் நிலவுலகம் இருள் உலகம் என்ப, உலகம்
ஈண்டு உயி்ர்களின் மேற்று, என்னை? ஏத்துதற்குரியன
அவைகளேயாதலின் என்க,

இருள் உலகத்தாரும் அருகனை, வணங்குவரே என்னின்
வணங்குவர். என்னை? நரகவுலகமாகிய அதன்கண்
வீழ்ந்துழல்வோர்க்கும் அவனடிகளையன்றிக் களைகண்
பிறிதில்லையாகலின், அங்கும் நல்லறிவுபெற்று வணங்குவர் என்க,

நரகத்துழலும் உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தந்தீவினைக்
கிரங்கி அறமுதலியவற்றைச் செய்ய அவாவுவர் அன்பதனை,-

    நரகத்தே கிடந்து நலிவோர் கூற்றாக வருகின்ற,

        “தேடிப் பொருளைச் சிறுதோழிற்கே
               செலுத்தி யுணர்ச்சி தெரியாமல்
          பாடிப் பதருக் கிறைத்ததெல்லாம்
               பலித்த தெமக்கீங் கென்பர்சிலர்
          கேடிப் படிவந் தெமைச்சூழக்
               கெடுத்த பாவி யுலகிலின்ன
          நாடிப் பிறக்க விடினுமங்ங
               னுடோ மென்று சிலர்சொல்வார்”

எனவும்,

        “என்று மிறவோ மென்றிருந்தோ
               மிறந்து படுவ தீதறிந்தால்
          அன்று படைத்த பொருளையன்றே
               யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்
          சென்று வரவாங் கெம்மையின்னஞ்
               செலுத்திற் புதைத்த திரவியத்தை
          யொன்று மொழியா தறம்புரிந்திங்
               கோடி வருவோ மென்பர்சிலர்”

எனவும்,

        “பிறந்த வுடனே துறந்துசுத்தப்
               பிரம முணர்ந்து பிறப்பதனை
          மறந்திந் நரகத் தெய்தாமை
               வருமோ நமக்கு மென்பர்சிலர்
          பிறந்து நிரையத் தழுந்தியிட
               ரிவ்வா றுழப்ப தறியாமற்
          சிறந்த விவேகர் பெருமான்நற்
               செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்”

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் உணர்க,

இவ்வாறு தந்தீவினைக் கிரங்கு நரகர் அதன் தீர்வுகருதி
இறைவன் அடிகளை ஒருதலையாக ஏத்துவர் என்க,

திலகம் - நெற்றிச்சுட்டி, அறிஞர் தம் நெற்றியிலிடுதற்கியன்ற,
திலகம் போன்ற அடிகள் எனினுமாம், திறல் அறிவன் -
முற்றறிவினை உடைய இறைவன் ; இதனைக் ‘கேவலஞானம்’
என்பர். மூவுலகத்துமுள்ள உயிர் முதலிய பொருள்களின் முக்கால
நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் ஒருங்கே அறியும்
ஆற்றலுடைமையின் இறைவன் அறிவினைத் திறல் அறிவு என்றார்.

“உலகுணர் கடவுள்” அன்று திருத்தக்க தேவரும் (சீவக-2719)
“உலகம் மூன்று மொருங்குணர் கேவலத் தலகிலாத அநந்த குணக்
கடல்” என்று (கடவுள் வாழ்த்து) யசோதரகாவியமுடையாரும்
ஓதுதலுணர்க.

இனி, உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலகமாய
திறலறிவன் அடி என்று பொதுவி னோதியதன்றி அருகன்
என்னாமையின் அருகக் கடவுளின் அடிகள் என்றுரை
கூறியதென்னையோ? எனிற் (சமண சமயத்துப் பேராசிரியர் உரை
கூறுமாறு) கூறுதும் :-

உலகத்துச் சான்றோரால் வணங்கப்படுபவர்
இன்னாசெய்யாமையும், பொய் கூறாமையும், கள்ளாமையும்
காமமில்லாமையும் பற்றின்மையும் முதலாகிய குணங்கள்
உடையார் அல்லரோ. இக்குணங்கள் முழுதும் உடையான்
அருகக்கடவுளேயன்றி வேறு சமயக்கணக்கர் கூறும் இறைவர்க்
கெல்லாம் இக் குணங்களின்மையான் “உலகம் முன்றும் ஒருங்குடன்
ஏத்தும் மாண் திலகம் ஆய திறல் அறிவன் என்பது அருகக்
கடவுளுக்கே பொருந்துவதாயிற்று என்க.

இனி, இறைவன் அடிவணபகுதலின் குறிக்கோள், வழுவில்
நெஞ்சொடு வாலிதின் ஆற்றலே ஆதலின் அதனையே குறித்தார்.
வழுவில் நெஞ்சம் பெறுதற்கு இருள்சேர் இருவினையும் அகலுதல்
இன்றியமையாமையின் “தொல்வினை நீங்கவும்” என்றார்,
தொல்வினை நீங்க என்றும் எனல் வேண்டிய எண்ணும்மை
செய்யுள் விகாரத்தாற் றொக்கது.                    ( 1 )