இனி, இப் பெருங்கதையில் ஒரு
நிகழ்ச்சியினை மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் தமது நூலில்
ஓரிடத்தே,
''கொடிக்கோ சம்பிக் கோமக
னாகிய வடித்தேர்த் தானை வத்தவன்
தன்னை, வஞ்சம் செய்துழி வான்றளை
விடீஇய உஞ்சையிற் றோன்றிய யூகி
அந்தணன் உருவுக் கொவ்வா உறுநோய்
கண்டு பரிவுறு
மாக்களின்'' (மணி. 15: 61 - 6.)
என அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பெரியார் இங்ஙனம் பரிவுறு
மாக்களை ஒரு நூலிற் கண்டே கூறுகின்றார் ஆதல் வேண்டும். அம் மாக்களின்
பரிவினை இப்பெருங்கதையிலே அவர் கண்டிருப்பர். ஆனால் அந்நிகழ்ச்சி
இருக்கவேண்டிய முற்பகுதி இப்பொழுது நமக்குக் கிடைக்கவில்லை. ஆசிரியர்
சீத்தலைச் சாத்தனார் காலத்திலேயே இவ் வுதயணன் கதை நம் நாட்டிற் பயில
வழங்கி வந்தது என்பது தேற்றமே.
இனி இதுகாறும் கூறியவை கொண்டு
இந்நூல் நந்தமிழ் மொழியிலே இயற்றப்பட்ட தொரு முதனூலே என்பதும், இந்நூல்
சிந்தாமணி முதலிய ஐம்பெருங்காப்பியங்கட்கும் முற்பட்டது என்பதும்
போதரும்.
இனி, இவ்வுதயணன் கதையைப்
பொருளாகக் கொண்டெழுந்த வடநூல்களும் தமிழ்நூல்களும் பலவுள. அவை யெல்லாம்
தம்முள் கதைப்போக்காற் பெரிதும் மாறுபாடுடையன. அவை வருமாறு:
|