முன்னுரை

இனி இப்பெருங்கதையைக் கொங்குவேளிர் அருகசமயம் இத் தமிழகத்தே நன்கு பரவி வளர்ச்சியுற்றிருந்த காலத்தே தான் செய்தனர் ஆதல் வேண்டும்; அக்காலம் சிந்தாமணி சிலப்பதிகாரம் முதலிய மாபேரிலக்கியங்கள் தோன்றுதற்குக் காரணமாக இருந்ததும், கடைச்சங்க காலத்திற்கும், தேவார காலத்திற்கும் இடைப்பட நிகழ்ந்ததும் ஆகிய காலமே என்று ஒருவாறு துணியலாம். ஆயின், சிந்தாமணி முதலியவற்றை ஐம்பெருங் காவியம் என்று வழங்கிய சான்றோர் இந்நூலின் மறந்தது என்கொல்? என்றோர் வினா சிலர் உளத்தே தோன்றுதல் கூடும். அவ்வினாவிற்கு ஐம்பெருங் காவியம் என்னும் வழக்குப் பிற்காலத்தார் வழக்கென்றும் அவர் சூளாமணியை விடுத்தமைக் குற்ற காரணம் என்னை? என்றும் கூறி மறுக்க.

இனி இந்நூற்கு முதனூல் தான் யாது? மற்றிது தோன்றியது எவ்வாறு எனக் கடாவுவார்க்குக் கூறுதும் .அருகசமயத்தினரால் வழி வழியாகக் கேள்வி மாத்திரை யானே போற்றப்பட்டு வந்த முடிவேந்தர் வரலாற்றின் தொகுதியை அவர் பெருங்கதை என்று வழிங்கி வந்தனர் என்றும், அப்பெருங்கதைப் பகுதிகளினின்றும் பல்வேறு காலத்திலும் நாட்டிலும் வாழ்ந்திருந்த பற்பல புலவர்களும் பல்வேறு நூல்களை இயற்றிக்கொண்டனர் என்றும், அருகசமயம் வடநாடும் தென்னாடுமாகிய எவ்விடத்தும் நன்கு பரவி இருந்தமையால் அவ்வந் நாட்டுப் புலவர்கள் தத்தம் மொழியாலே நூல் செய்வார் ஆயினர் என்றும், அருகசமயம் நஞ்செந்தமிழ் நாட்டில்
ஓங்கியிருந்த காலத்தே அச்சமயநெறி நின்றொழுகிய வேளிர் இக் கதையில் ஒரு பகுதியாகிய உதயணன் கதையைப் பொருளாக அமைத்து நந்தண்டமிழில் இப் பெருங்கதையை ஆக்கியருளினர் என்றும் அதனால் இது முதனூலே என்றும் கருதுவது பொருந்தும் என்றே எமக்குத் தோன்றுகின்றது.