|
முன்னுரை
|
இனித் தமிழிலுள்ள எந்த நூலுக்கும்
வடமொழி முதலியவற்றில் முதனூல் காட்ட விரும்பும் இயல்புடைய சிலர் இப்
பெருங்கதைக்கும் பிறமொழியில் முதனூல் காட்டப் பெரிதும் முயன்று
கையறவெய்தினர். அத்தகையோர் குணாட்டியர் பைசாச மொழியில் இயற்றிய ''பிருகத் கதா'' என்னும் நூலே இதற்கு முதனூல் ஆதல் வேண்டும் என்றும், கி.பி. 5 ஆம்
நூற்றாண்டில் அல்லது 6 ஆம் நூற்றாண்டிலிருந்த துர்விநீதன என்னும் கங்கராசன்
பைசாச மொழியிலிருந்து மொழி பெயர்த்தமைத்த பிருகத் கதையே இதன் முதனூல்
என்றும் தத்தமக்குத் தோன்றியவாறே கூறிப் போந்தனர். இவற்றுள் குணாட்டியர்
நூல் இப்பொழுது இல்லை. மேலும் அது சைவசமயச் சார்பானதென்று அந்நூலினின்றும் பிற்காலத்து மேற்கோளாகப் போந்த பகுதிகளான் அறியப்படுகின்றது. கங்கராசன் இவ்வாசிரியர்க்குக் காலத்தாற் பிற்பட்டவன்
என்று தெரிகின்றது. இனி, இப்பெருங்கதை தோன்றிய காலத்தை ஆராய்ந்து வரையறை
செய்தற்குச் சான்றுகள் நன்று கிடைக்கவில்லை எனினும், சிலப்பதிகாரத்தில்
அடியார்க்கு நல்லார், இப்பெருங்கதையினை, ''கூத்தியர் இருக்கையுஞ் சுற்றியதாகக்
காப்பிய வாசனை கலந்தவை சொல்லி என இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின்
இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு
திருவிற்பாண்டியன் அவைக் களத்து அகத்தியனாரும் தொல்காப்பியனாரும்
இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும் வெள்ளூர்க் காப்பியனாரும் சிறு
பாண்டரங்கனாரும் மதுரை யாசிரியன் மாறனாரும் துவரைக் கோமகனும் கீரந்தையாரும்
என்றித் தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து
எழுநூற்றுவர் தம்மாற் பாடப்பட்ட கலியுங் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள்
இலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும்,'' என்று இவ்வொரு நூற்கே பெரிதும்
பாராட்டுரை வழங்கிச் சிந்தாமணிக்கு முற் கூறியிருத்தலைக் கூர்ந்து நோக்குமிடத்தே
இந்நூல் சிந்தாமணி மணிமேகலை முதலியவற்றிற்கும் முற்றோன்றிய தென்று அப்பெரியார்
கருதினர் என்பது விளங்கும்.
| |