இந் நூற்பாக்களின் கருத்தாவது
அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும், தொடர்நிலைச் செய்யுள் உறுப்புக்களாம்;
இவற்றுள், பழையதொரு கதை பொருளாகக்கொண்டு செய்யப்படும் தொடர் நிலைச்
செய்யுள் தொன்மை எனப்படும். அது தானே குவிந்து மெல்லென்ற சொல்லானும்
பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருள் இன்பம் பயப்ப வீடென்னும்
விழுமிய பொருள் பயப்பச் செய்தவழித் தோல் என்னும் வனப்பிற்றாம்
என்பதாம். இத்தகைய நூல்கள் கொச்சக்த்தானும், ஆசிரியத்தானும்,
வெண்பாவானும், வெண் கலிப்பாவானும் மற்றும் இனனோரன்ன செய்யுட்களானும்
கூறப்படும். இவ் விலக்கணம் பற்றி ஆசிரியத்தானே உதயணன் வரலாறாகிய
பழையதொரு கதையைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இப் பெருங்கதை என்னும்
தொடர் நிலைச் செய்யுள் என்றுணர்க. தொடர்நிலைச் செய்யுள் எனினும்,
காப்பியம் எனினும் ஒக்கும்.
மேலும், ''ஞகாரை முதலா ளகாரை
யீற்றுப் புள்ளியிறுதி இயைபெனப்
படுமே.'' (தொல் - செய். 240.)
என்னும் இலக்கணம் பற்றி இந்நூல் இயைபென்னும் வனப்
புடைத்தாகத் தன்பால் அமைந்த சிற்றுறுப்புக்களாகிய செய்யுள் ஒவ்வொன்றும்
னகர மெய்யீற்றின் இற்று மேல்வருஞ் செய்யுளோடு பொருட்டொடராகவும் சொற்றொடராகவும் இயைபு படச் செய்யப்பட்டுள்ளது. இதனை, ''இயைபென்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது
கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்கு
வேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன,''
எனப்
பேராசிரியர் இந்நூற் பாவினுக்குக் கூறிய விளக்கத்தானும்
உணர்க..
|