முன்னுரை
 

இந்நூல் நமது செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் தொடர்நிலைச்செய்யுள் நூல்களுள் ஒன்று. இது கொங்கு வேளிர் என்னும் நல்லிசைப் புலவரான் இயற்றப்பட்டதாம். இஃது அருக சமயச் சார்பாக எழுந்ததொரு நூல் ஆகும். ஆசிரியர் தொல்காப்பியனார்,

''அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே'' 

(தொல். செய். சூ. 1.)

எனத் தொடர்நிலைச் செய்யுட்குரிய எண்வகை வனப்பினையும் தொகுத்து ஓதி இவற்றுள்,

''தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே''

(தொல். செய். 237.)

என்னும் நூற்பாவானே பழைய கதையைப் பொருளாகக் கொண்டியற்றப்படுந் தொடர்நிலைச் செய்யுள் தொனமை என்னும் வனபபயிற்று என்றும் கூறி, மேலும் அத் தொடர்நிலைச் செய்யுள்தானே,

''இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஓழுகினும்
தோல்என மொழிப தொன் மொழிப் புலவர்''

(தொல். செய். 238.)

என்றும் இனிதின் இலக்கணம் வகுத்தருளினார்.