முன்னுரை
 

''உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றென்ப தின்றறிந்தேன்
மன்னுபுகழ் வச்சத்தார் மன்னவா-உன்னுடைய
பொன்னாகத் தெங்கையர்தம் பொற்கைநகச் சின்னங்கண்
டென்னாகத் தேயெரிகை யால்''

எனவும் வரும் இப்பழம் பாடல்கள் அவ்வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூலின்கண் உள்ளனவாதல் கூடும் என்று எண்ண இடனுளது.


    இனி, இந்நூல் தோன்றிய காலம் தமிழ்மொழிக்கண் ஒரு மறுமலர்ச்சி தோன்றிய காலம் என்று தோன்றுகின்றது. என்னை? கடல் கொண்ட கவாடபுரத்தேநிகழ்ந்த முதற் சங்ககாலந் தொடங்கி இப்பொழுதுள்ள மதுரையின் நிகழ்ந்த கடைச்சங்க காலம் முடிய நிகழ்ந்த அந்நீளிய கால மெல்லாம் நம் செந்தமிழ் மொழியில் தோன்றிய இலக்கிய மெல்லாம் ஒரே வகைப் பண்பாடுடையனவேயாம். அக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாது தனி நெறி நின்று அறம் பொருள் இன்பம் என்னும் மூவகை உறுதிப் பொருள்களையும், அகம்புறம் என்றும் இருவகைப் பொருள் நெறியின்கட்படுத்தி ஒப்பற்ற இலக்கியங்களைப் படைத் தளித்தனர். 

இவர்களினது  சமயஞ்சாராச் சால்புடைமைக்குத் திருக்குறளும் தொல்காப்பியமும் அழியாத சான்றுகளாகும். இனி மக்களின் உள்ளம் எப்பொழுதும் புதுமையை விரும்பும் இயல் புடையதாம். இவ் வியல்பானே மொழிகளில் மறுமலர்ச்சி தோன்றுகின்றது. கடைச்சங்க காலத்தின் பின்னர் நந்தமிழகத்தில் புத்த சமண சமயங்கள் தலைதூக்கின. அவை மன்னர், சான்றோர் முதலிய மக்களின் நெஞ்சத்தைத் தம் புதுமையானே பெரிதும் கவர்ந்து கொண்டன. இக் காரணத்தால் இக்காலத்தே சமயச் சார்புடைய இப்பெருங்கதை சிந்தாமணி, மணிமேகலை முதலிய அருமந்த பெருங் காப்பியங்கள் தோன்றலாயின.