இம்மானனீகை என்பவள் யார் என்று
உதயணனாதல், வாசவதத்தையாதல் அறிந்ததில்லை. ஒரு தோழி-திறமுடைய தோழி-என்று
மட்டுமே அவர்கள் அறிவர். ஆனால் இதனை ஓதும் யாமோ அவள் கோசல மன்னனின்
மகள் என்றும், ஒரு காரணத்தால் இங்கே வந்து வாசவதத்தைக்குத் தோழியாக உள்வரிக் கோலத்தோடு கரந்துறைவாளாயினள் என்றும் நன்குணர்வோம். நனி
உயர்ந்த வேந்தர் குடிப்பிறந்தாளாகிய அம் மானனீகை எழுதிய
இத்திருமுகம்.
''நிலத்திற் கிடந்தமை கால் காட்டுங்
காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்''
(குறள்: 619)
என்னும் அருமைத் திருக்குறளுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத்
திகழ்ந்து நமக்கு அளவற்ற இன்பம் அளித்தலும் உணர்க.
சான்றாண்மையுடைய உதயணன் நெஞ்சம்
தன் தகுதிக் கேற்றவிடத்தே தான் நெகிழந்துள்ளது. மானனீகை தானும் உதயணன்பாற்
காதல் பெருகிய உள்ளத்தினளேனும் தன் உயர்குடிப் பிறப்பிற்கேற்ப இங்ஙனம்
மறுத்தனள் ஆயினும், உதயணன் மீண்டும் மீண்டும் நெருக்குதலானும், ஊழும் அங்ஙனம் இருத்தலானும் ஒருவாறு உடம்பட்டு அரண்மனையின் பூம் பொழிலில்
அமைந்ததொரு மண்டபத்தைக் குறிப்பிட்டு அம்மண்டபத்திற்கு எம்பெருமான் ! இற்றை
இரவில் எழுந்தருள்க ! என்று (தமிழ் முறைப்படி) இரவுக் குறியிடம் கூறி
விட்டாள்.
''மாதர் நோக்கின் மானனீகை''
மறுமொழியைப் பெற்ற உதயணன் அவள் பால் காமம் பெருகிக் காதல் கடிகொள அற்றைப்
பகலை அரிதினிற் கழித்து அவள் குறிப்பிட்ட மண்டபத்தை ஆரிருளிலடைந்தான்.
ஆண்டு மானனீகையையும் கண்டு..................
இஃதிங்ஙனமாக உதயணன் ஒழுக்கத்தில் வாசவதத்தை ஐயுற்று அவனைப் பின் தொடர்ந்து ஆராய்தற்குத் தன் உயிர்த்
தோழியாகிய காஞ்சனமாலையை விடுத்திருந்தாள். இவ்வாற்றால் காஞ்சனமாலையும்
உதயணனை அவன் அறியாது பின் தொடர்ந்து அம்மண்டபத் தயலிலே மறைவாக இருந்து ஆண்டைய நிகழ்ச்சிகளை ஒற்றியறிந்து தன் தலைவிக்குக் கூறி
விட்டனள்.
|