முன்னுரை

இனி, நமது பேரிலக்கியங்களுள்ளும் இவ்வுதயணன் வரைந்த காதற் கடிதந் தரும் அளவு இன்பம் செறிந்த பகுதிகள் பெரும்பாலன அல்ல இக் காதற்கடிதம் எத்தனை முறை திரும்பத் திரும்ப ஓதினும் தித்திக்கும் தன்மையுடையதாதல் உணர்க.

    இன்பஞ் செறிந்த செய்யுள் இஃதென அதனை நுகர்ந்த ஒருவன் மற்றொருவனுக்குச் சுட்டிக் காட்டலாவதன்றி இச்செய்யுள் இன்னின்ன காரணத்தால் இன்பமுடைத்தாயிற்று என்றாதல், செய்யுளின்பத்திற்கு இன்ன இலக்கணம் என்றாதல் கூறிக் காட்டுதல் இயலாது என்ப. அங்ஙனமே
மானனீகை யின்பாற் காதல்கொண்ட உதயணன் வரைந்த இக்காதற் கடிதம் நல்கும் இன்பம் இத்தகையது என்று சொல்லிக்காட்ட இயலாதேம் ஆகின்றோம் அல்லமோ?


   

''...............................நிரப்பின் றெழுத
இடத்தள வின்மையிற் கருத்தறி வோர்க்குப்
பரந்துரைத் தென்னை ?''

என்றே யாமுங் கூறி அமைகின்றோம்.

   

இனி இலக்கியங்கட்குப் பெருஞ்சிறப்பளிப்பன அவற்றிலமைந்த சுவைப் பகுதிகளே ஆகும். இச்சுவை தரமாட்டாதன இலக்கியங்களும் ஆகமாட்டா. சுவை ;--நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் இவ் வெட்டுமாம். இவற்றிற்கும் நிரலே இந் நூலினின்று ஒவ்வொன்று காட்டுதும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் சுவையுள் நகையினை முன்னிறுத்தியதற்கும் சிறந்த காரணம் உண்டு. அம் முறையிலேயே யாமும் காட்டுதும். (முற் கூறப்பட்ட) உதயணன் தன்னுள்ளத்தைத் திறந்துகாட்டி வாசவதத்தையின் பிறை நுதலிற் பொறித்துத் தனக்கு விடுத்த திருமுகத்தை உணர்ந்து
மானனீகை, ''தேவி! பெருமகன் எழுதிய பேரலங்காரத் திருமுகம் அழகுடைத்து,'' என அவளை மருட்டினளாய் இச் சொற்றொடர் உதயணனால் கோலஞ்செய்யப்பட்ட நின் அழகிய முகம் அழகுடைத்து என்றும், உதயணனால் நினது நுதலிற் பொறிக்கப்பட்ட ஓலைப்பாசுரம் இனிமையுடைத்து என்றும் பொருள் படுதல் உணர்க. மறுநாட் காலையில் அத் திருமுகத்திற்கு மறு மொழியாக அவ்வாசவதத்தையின் நுதலிலேயே, ''நெறிமயிர்க் கருகே அறிவரிதாக முழுதியல் அருள்கொண்டு அடியனேன் பொருளா எழுதிய திருமுகம் பழுதுபடல் இன்றிக் கண்டேன். காவலன் அருள்வகை என்மாட்டு உண்டே ஆயினும் ஒழிக எம்பெருமகன். மடந்தையர்க் கெவ்வாறு இயைந்ததை இயையும்? பொருந்திய பல்லுரை உயர்ந்தோர்க்கு ஆகும். சிறியோர்க்கு அருளிய உயர்மொழி வாசகம் இயைவதன்றால். இவ்வயின் ஒருவருங் காணார் என்று காவலுள் இருந்து பேணா செய்தல் பெண் பிறந்தோர்க்கு இயல்பும் அன்றே. அயலோர் உரைக்கும் புறஞ்சொல்லும் அன்றி அறந்தலை நீங்கும் திறம்பல வாயினும் குறைந்த என் திறத்து வைத்ததை இகழ்ந்து மறப்பது பொருள்,'' என்று இனிதின் வரைந்து அவன்பால் விடுத்தாள்.