முன்னுரை
 

2. அவலச் சுவை

இச்சுவை பிறத்தற் கிடமான பகுதிகள் இப்பெருங்கதையில் மிக்குள்ளன. உஞ்சைக் காண்டத்தில் (46) உழைச்சன விலாவணை, (47) உரிமை விலாவணை என்பனவும், இலா வாண காண்டத்தில் (10) யூகிக்கு விலாவித்தது, (19) தேவிக்கு விலாவித்தது என்பனவும் ஆகிய நான்கு காதைகளும் இவ் அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
யூகி என்னும் அமைச்சன் இறந்துபட்டானாகக் கருதிய உதயணகுமரன்,

''மாழாந்து உயில் வாழ்வு ஒழிகெனச்
சிதர்பொறி எந்திரம் போலச் சிதர்ந்து
தாரும் பூணும் மார்பிடைத் துயல்வரச்
சோருங் கண்ணினன் துளங்கிமெய்ம் மறப்ப
இடியே றுண்ட நாகம் போலக்
கொடியேர் சாயல் கொழுங்கவின் வாடப்
பூவிருங் கூந்தல் புல்லென விரிய
வாசவ தத்தையும் வத்தவன் மார்பின்
மம்மர் எய்திய மயக்க நோக்கி
விம்ம லெய்திய வியன்பெருங் கோயில்
அழுகை ஆகுலங் கழுமிய பின்றை''

    (2. 10: 109-118)

எனக் காப்பியத் தலைமக்கள் இருவரும் அவலித்தலும்,

''மாதாங்கு தடக்கை மன்னருள் மன்னவன்
நளிகதிர் மண்டில நாண்முதற் றோன்றி
ஒளியிடப் பெறாஅ உலகம் போல
இருளகம் புதைப்ப மருளகத் தெய்தித்
தருமமும் கருமமும் தளரச் சாஅய்
ஆழின் அல்லதை அரசியல் வழாமை
வாழ்த லாற்றேன் யான்ன மயங்கி''

(2. 10: 132-138)

உதயணன் அவலித்தலும்,

வாசவதத்தையைத் தீப்பற்றிய அரண்மனையிற் புகுந்து யாண்டும் தேடி
அவள் இறந்துவிட்டாளாகக் கருதிய காஞ்சன மாலை கல்லும் மண்ணும்
உருகும்படி வாய்திறந்து,

''நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய
காவலன் மகளே ! கனங்குழை மடவோய் !
மண்விளக் காகி வரத்தின் வந்தோய் !
பெண்விளக் காகிய பெறலரும் பேதாய் !
பொன்னே ! திருவே ! அன்னே ! அரிவாய் !
நங்காய் ! நல்லாய் ! கொங்கார் கோதாய்
வீணைக் கிழத்தீ ! வித்தக உருவீ !
தேனேர் கிளவீ ! சிறுமுதுக் குறைவீ !
உதயண குமரன் உயிர்த்துணைத் தேவீ !
புதையழல் அகவயிற் புக்கனை யோஎனக்
கானத் தீயிடைக் கணமயில் போல''

(2, 18: 76-86)

அவலித்தலும் ஒருசில எடுத்துக்காட்டுக்களாம்.

இன்னோரன்ன பகுதிகள் உணர்ச்சியோடு கதை தழுவி ஓதுவாருடைய கண்களிலே அவலக் கண்ணீரைத் தோற்றும் பெற்றியன.