முன்னுரை
 

9.ஊடலும் கூடலும்

கலையுள்ளம் படைத்த உதயணகுமரன் பதுமாபதியின் மாளிகையில் அவளோடு அளவளாவி இருக்கும்பொழுது அம் மாளிகையின்கண் எழுதப்பட்டிருந்த ஒரு மான் ஓவியத்தினையும் அதன் கண் அழகினையும் கூர்ந்து நோக்கி அவ் வழகில் கருத்தொன்றி நின்றானாக; அது கண்ட பதுமாபதி தன் மருங்கிருந்தும் இக் கயவன் நம் அழகைப் பொருட்
படுத்தாமல் வேறெதனையோ கூர்ந்து நோக்குகின்றனனே என்று சினந்து அவ்வுதயணன் செவியிற் படும்படி,

''சூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின்
மயிரும் இறகும் செயிறரக் கழீஇக்
கோல்நெய் பூசித் தூய்மையுள் நிறீஇப்
பாலுஞ் சோறும் வாலிதின் ஊட்டினும்
குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்
மக்கள் என்று மதியோர் உரைத்ததைக்
கண்ணிற் கண்டேன் என்று கைந்நெரித்துக்''

(3 - 14 : 108 - 144)

கூறிப் பின் தன்னையே நோவாளாய்,

''தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்
தம்மை நோவ தல்லது பிறரை
என்னது நோவல் ஏதம் உடைத்துஎனக்
கருங்கேழ் உண்கண் கயலெனப் பிறழ்ந்து
பெருங்கயத் தாமரைப் பெற்றிய வாகத்
திருநுதல் வியர்ப்பெழுந் திருநிலத் திழிதர
நிலாவுறு திருமுக நிரந்துடன் மழுங்கி''

(ஷ - 116 - 122)

ஒருபால் ஒதுங்கினள். இந்நிலைமையைக் கண்ட உதயணன் பெரிதும் அஞ்சி,

''கரும்பேர் கிளவி கதிர்முகை முறுவற்
பெருந்தடங் கண்ணி ! பிழைப்பொன் றுணரேன்
... ... ... ...
அரவுவாய்க் கிடப்பினும் அலர்கதிர்த் தண்மதிக்
குருவுக்கதிர் வெப்பம் ஒன்றும் இல்லை
சிறியோர் செய்த சிறுமையுண் டெனினும்
தரியாது விடாஅர் தாநனி பெரியோர்
என்பது சொல்லி''

(3. 14 ; 135 - 143.)


இரந்து அவளது சிறுபுறம் நீவித் தோடுதிருத்தி நலம் பாராட்டிச் செவ்வி தேர்ந்து தழுவ முயல்வானாக; அந் நங்கை இவற்றானும் ஊடல் தீராமல் ஒருபாற் செல்லுங்கால் அம் மாளிகை உச்சிஇன் மேலிருந்து ஒரு கூகை அக் கூரிருட் பொழுதில் அஞ்சுதகக் குழறிற்று. அவ் ஒலியானே அவள் நெஞ்சந் துட்கென்று அஞ்சி நடுங்கியவளாய் அண்ணலைக் கதுமெனத் தழுவிக் கொண்டனள். அவ்வச்சு முயக்கத்தை உதயணன் பெரிதும் விரும்பி,
 

''மெல்லியன் மாதரொடு மேவன கிளந்து
புல்லியும் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்
அல்குலும் ஆகமும் ஆற்றநலம் புகழ்ந்தும்
அமரர் ஆக்கிய அமிழ்துஎனக்கு இளையோள்
தன்முனை எயிற்றுநீர் தானென அயின்றும்
ஒழுகா நின்ற காலை''

(ஷ : 159 - 164.)


எனவரும்.