7. வெகுளிச் சுவை
வெகுளிச் சுவை தோன்றுதற்கு,
உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்னும் நான்கும் நிலைக்களன் என்பர்
ஆசிரியர் தொல்காப்பியனார்.
உதயணன்
வாசவதத்தையை வஞ்சகமாகக் கவர்ந்து போயினன் என்ற செய்தியை மறமாச்சேனன்
என்னும் மன்னர் மன்னனுக்கு வராகன் என்னும் பணியாள் வந்து கூறுகின்றான். அச்
செய்திகேட்ட அவ்வடல் வேந்தன்,
''செருச்செய் நெடுங்கண் தீயெனச்
சிவப்பப் பிரச்சோ தனனெனும் பெரும்பெயர்
விளக்கம் மகிழ்ச்சி
எய்தி வந்தவற்
றெளிந்த இகழ்ச்சி அளற்றுள் இறங்கிற்
றின்றெனச் சுற்ற மாக்களைச் சுடுவான்
போலப் பொற்றார்
மார்பன் பொங்குபு
வெகுண்டு முகைநகை
முத்தொடு தகைமுடி தயங்க அருவரை அகலத்(து) ஆரம்
புரளத் திருமுடி அண்ணல் தீப்படச்
சீறி எழுவுறழ் திணிதோள் எடுத்தனன்
ஓச்சிப் பொழிமணித் திண்தூண் பொறிபடப்
புடைத்து மாற்றுச் சிங்கத்து மறக்குரல்
கேட்ட ஏற்றுச் சிங்கத்தின் இடித்தெழுந்
துரறி ...
... ... ...
எள்ளி இறந்த இன்னா
மன்னனைப் பற்றுபு தம்மென்'' (1. 47 : 100-121)
எனக் கட்டளையிட்டான்
எனவரும்.
பிற்றைநாட் புலவராகிய
கம்பநாடரும் இப்பிரச்சோதனனிடத்தேதான் தமது காப்பியத்திலே வரும் இராவணன்,
இரணியன் முதலியோர்க்கு வெகுளக் கற்றுக் கொடுத்திருத்தல் வேண்டும் என்று
எமக்குத் தோன்றுகிறது. இது, குடி கோள் நிலைக்களனாகப் பிறந்த வெகுளி
எனப்படும்.
8. உவகை
உவகை என்பது, செல்வம் அறிவு புணர்ச்சி விளையாட்டு என்பன நிலைக்களனாகத் தோன்றும் மகிழ்ச்சி என்ப.
எனவே காமம்பற்றி வரும் சுவையெல்லாம் இதன்கண் அடங்கும். பெருங்
காப்பியத்திற்குக் காமச்சுவையும் அவலச்சுவையுமே தலைசிறந்த சுவைகளாகும் என்ப. அவலமும் காமச்சுவை சார்வாகத் தோன்றின் மிக இனிமையுடையதாம். தமிழர்
மேற்கொண்ட அகம்புறம் என்னும் இரு பகுதிகளினும் இவ்வவலச் சுவை நிரலே முல்லை
நெய்தல் பாலை என்னும் மூவகை அக ஒழுக்கத்தினும் காஞ்சி என்னும்
புறவொழுக்கத்தினும் மிகுதியாகக் காணப்படும். இன்பம்பற்றிய அவலமும் இன்பச்
சுவையே யாகும். இச்சுவையின் சிறப்பை ''வடநூலுட் போசராசனும் சுவைபல என்று
கூறுவார் கூறுக. யாங் கூறுவது இன்பச் சுவை ஒன்றனையே என இதனையே மிகுத்துக்
கூறினான்'' என ஆசிரியர் பரிமேலழகர் (குறள்-காமத்துப்பால் முன்னுரை.)
நுண்ணிதின் எடுத்துக் காட்டினர்.திருத்தக்க முனிவர்பாற் சில புலவர்கள் ''ஆருகத
சமயஞ் சார்ந்த புலவர் துறவு பாடுவரல்லது காமச்சுவை கனியக் காப்பியம் இயற்ற
அறியார்'' என்று கூறினர் என்றும், அதுகேட்ட முனிவர் அச்சுவை கெழுமப் பாடுவதிலும்
ஆருகதர் ஆற்றல் மிக்கவரே என்று அப்புலவர்கட்குக் காட்டும் பொருட்டுத் தமது
சீவக சிந்தாமணியை அச்சுவை ததும்பவியற்றினர் என்றும் ஒரு கதை வழங்குகின்றது.
இப்பெருங்கதை அவ் உவகைச் சுவையில் சீவக சிந்தாமணியினும் ஒரு சிறிது
உயர்வுடையதாகவே விளங்குகின்றது. இந் நூலின்கண் வரும் பல காதைகள் காமச்சுவைக்கே நிலைக்களனாகத் திகழ்வதைக் காணலாம். அவற்றையெல்லாம் ஓதியே உணர்தல் வேண்டும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் பார்த்தல்
போன்று ஒன்றிரண்டு ஈண்டுப் பார்ப்போம்.
|