முன்னுரை
 

6.பெருமிதச்சுவை

பெருமிதம் என்பது வீரம். இது கல்வி தறுகண் புகழ் கொடை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும். கீழ்க்காட்டும் ஒரு பகுதியே இந் நான்கிற்கும் சிறந்த எடுத்துக் காட்டாதல் உணரலாம். (உதயணன்பாற் கற்று நிரம்பிய பிரச்சோதனன் மக்கள் அரங்கேறிய பொழுது ஆன்றோர் அப் பிரச்சோதன மன்னனை நோக்கிக் கூறியது)

''பனிவிசும் பியங்குநர் பாடோர்த்து நிற்பக்
கனிகொள் இன்னிசைக் கடவுள் வாழ்த்தித்
தேவ கீதமொடு தேசிகந் தொடர்ந்த
வேத இன்னிசை விளங்கிழை பாடத்
திருந்திழை மாதர்கொல் தெய்வங் கொல்லென
இருந்தவர் தெருளார் இசைபுகழ்ந் தேத்தி
நூலுஞ் செவியும் நுண்ணிதின் நுனித்தே
யாழும் பாடலும் அற்றம் இன்றி
விலக்கும் விடையும் விதியின் அறிந்து
துளக்கில் கேள்வித் தூய்மையின் முற்றி
வத்தவ நாடன் வாய்மையிற் றருக்கும்
கொற்ற வீணையும் கொடுங்குழை கொண்டனள்
இறைகெழு குமரரும் ஏனை விச்சைத்
துறைநெறி போகிய துணிவினர் ஆயினர்
தேயாத் திருவ நீயுந் தேரின்
நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய்
வேள்வியிற் றிரியாய் கேள்வியிற் பிரியாய்
இனையோய் தாணிழல் தங்கிய நாடே
வயிர வெல்படை வானவர் இறைவன்
ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும்
மீமிசை உலகினுந் தீதிகந் தன்றெனத்
தொல்லிசை யாளர் சொல்லெடுத் தேத்த''

(1. 37 :127 - 148)

எனவரும். அன்பர்களே ஆ ! ஆ ! இப்பகுதி பெருமிதச் சுவையோடு விழுமிய வீறுடைய தீவிய தண்டமிழின்பத்தை வாரி வழங்கும் தன்மையதாதலும் உணர்க. இத்தகைய ஒப்பற்ற இன்பப் பகுதிகள் தாம் இப் பெருங்கதையில் எத்தனை ! எத்தனை !