முன்னுரை
 

இக் காரணத்தால் இப் பெருங்கதை நம் பண்டைத் தமிழ் நூல்களுக்கு நுண்ணுரை கண்டுரைத்த அடியார்க்கு நல்லார், பேராசிரியர் முதலிய உரையாசிரியரெல்லாருக்கும் மேற்கோள் நூலாக அமைந்தது.

இனி, இப் பெருங்கதையில் திருக்குறள், நாலடிநானூறு முதலியவற்றிற் கூறப்படும் பொருள்கள் தகுந்த இடங்களிலே அழகாக எடுத்தாளப்படுகின்றன.

   

நம் அருமைத் திருக்குறளை எடுத்தாளாத புலவர்களே இலர் எனினும் இந் நூலின்கண் அத்திருக்குறள் மணிகள் எடுத்தாளப்படும் முறை சிறந்ததாகக் காணப்படுகின்றது. இந் நூலில் உறுப்பினர்களாக வருகின்ற தலைவன் முதலியோர் கூற்றாக அத் திருக்குறட் கருத்துக்கள் அங்கங்கே வருகின்றன. சில விடங்களில் இக் காப்பிய உறுப்பினர் தங் கூற்றோடு திருக்குறட் கருத்துக்களைப் பாலோடு தேன் கலந்தாற் போன்று அளாவித் தருகின்றனர். இதோ பாருங்கள்,

''வியன்கண் ஞாலத் தியன்றவை கேண்மின்
நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
நன்றே யாகி நந்தினு நந்தும்
நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
அன்றாய் மற்றஃ தழுங்கினும் அழுங்கும்
தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்குத்
தீதே யாகித் தீயினும் தீயும்
தீதாய் வந்த வொருபொள் ஒருவற்கு
ஆசில் பெரும்பொருள் ஆகினும் ஆகும்எனச்
சேயவர் உரைத்ததைச் செவியிற் கேட்கும்''

(2. 1 : 57 - 66)

எனவரும் இவ்வுரைகள்,

''நல்லவை எல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு''

(குறள் : 375)

எனவரும் திருக்குறள் நினைவாலே எழுந்த அத் திருக்குறளின் விளக்கமே ஆகும்.   

இன்னும் காண்மின், உதயணனைக் காதலித்த வாசவதத்தை தன் தந்தை தனக்கு வேறிடத்தே மணம் பேசுகின்றான் என்று கேள்வியுற்றபொழுது நொந்து கூறுபவள்,

''விதுப்புறு நடுக்கமொடு விம்முவனள் ஆகி
இதுமெய் யாயின் இன்னுயிர் வேண்டி
வாழ்வோர் உளரெனின் சூழ்கதன் வினையென
ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும்
சாவ துறுதியான்''

(1. 36 : 61 - 65)

என்று கூறுகின்றாள். இப் பகுதியைப் பாடுங்கால் வேளிரின் நெஞ்சத்தே,

''செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை''

  (குறள் : 1151.)

என்னும் திருக்குறள் நினைவு முகிழ்த்திருத்தல் வேண்டும் என்பது மிகையன்று.