வேளிர் இப்பெருங்கதையை வடவர் நாட்டினிகழ்ந்த வரலாற்றினைப்
பொருளாகக்கொண்டு இயற்றியவிடத்தும் அக்கதையாகிய நன்னாரிலே இவர்
செந்தமிழ்ப் பூம்பொழிலிலே மலர்ந்த பண்புகளாகிய நறுமலர்களையே
தொடுத்தமைத்திருக்கின்றார் என்பது இதனைப் பயில்வோர் நன்கு உணரலாம்.
செந்தமிழ்க்கே உரிய முதல் கரு உரி என்னும் முவ்வகைப்
பாகுபாட்டினும் இவர் உள்ளம் பெரிதும் ஊடுருவி நின்றமையாலே இக்
காப்பியம் நறுந்தமிழ் மணமே சால உடைத்தாங் விளங்குகின்றது.
இவர் முதல் கரு உரி என்னும் முப்பொருளையும் நினைந்து
அவற்றை
அழகுற அமைத்துள்ள ஓரிடத்தை மட்டும் ஈண்டுக் காட்டுவாம்.
உஞ்சையினின்றும் உதயணகுமரன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு
செல்லும் வழியில் இவர் முல்லை முதலிய நிலங்களைப் பாடுதற்குத் தகுந்த
வாய்ப்புண்டாக்கிக்கொள்ளுகின்றார். அவற்றுள் முல்லை நிலமாகிய முதற்
பொருளை நினைந்தவுடன் இப் புலவர் பெருமானுக்கு அந்நிலத்து எஞ்சிய
முதற் பொருளும் கருப்பொருளும் உரிப் பொருளும் உள்ளத்தே
தோன்றுகின்றன. முல்லைக்குப் பெரும்பொழுது கார்காலமாகும்; சிறுபொழுது
மாலைப்பொழுது ஆகும். இவற்றைக் ''காரும் மாலையும் முல்லை'' என்னும்
தொல்காப்பியத்தானும் (அகத். 6.) உணர்க. இருத்தலும் அதன் நிமித்தமும்
அம் முல்லைக்கு உரிப்பொருளாம். இவை முல்லைக்கு உரியவாதற்கு,
ஆசிரியர் நச்சினார்க்கினியர் நுண்ணிதிற் காரணங்கள் உணர்த்தினார்.
''பிரிந்துமீளுந் தலைவன்திற மெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே
முல்லைப்பொருளாயும், பிரிந்துபோகின்றான் திறங்கூறுவனவெல்லாம்
பாலையாயும் வருதலின் அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி
இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம். என்னை? வினைவயிற் பிரிந்து
மீள்வோன்''
விரைபரித் தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர் வயின்
வரூஉங் காலம் ஆவணியும் புரட்டாசியும் ஆதலின், அவை வெப்பமுந்
தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்துவரும் இளையர்க்கு
நீரும் நிழலும் பயத்தலானும் ஆர் பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலிற்
களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடு இன்புற்று விளையாடுவன
கண்டு தலைவற்குந் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானு மென்பது.
|