முன்னுரை
 

போகினாற் போன்று அவ் வச்சை மலர்களைச் சேராமல்,

''உறுபொருள் உள்ளது உவப்ப வீசி
வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத்து
உரத்தகை யாளர் சுரத்துமுதற் சீறூர்
எல்லுறு பொழுதிற் செல்லல் ஓம்பி
மகிழ்பதம் அயின்றிசி னாங்கு மல்லிகை
அவிழ்தா தூதி அளிதுயில் அமர''

(ஷ. 23-28)

வருகின்றது. ஆ! ஆ! எத்தனை எத்தனை இனிய நினைவுகள் இச்சிறுபுன் மாலைப் போதில் முகிழ்க்கின்றன. இஃதன்றோ சிறந்த புலமை நலம்! தேடியவெல்லாம் புதைத்துவிட்டுத் தம் அந்திக் காலத்தே வாய்வாளாது வறிதே அவற்றையெல்லாம் வைத்திழந்து போகும் மாந்தர் அக்காலத்தும் இக்காலத்தும் ஏன் - முக்காலத்தும் உளர் அல்லரோ? இனிப் பண்போடும் பசியோடும் தன்னாற் படைக்கப்பட்ட நல்லிசைப் புலவனைப் பேணும் சிந்தையில்லாப் புன் செல்வரே மிக்க இப் பேருலகத்தே பண்புடைய உறுபொருள் உள்ளது உள்ளி வீசும் புரவலரையும் அவ்விறைவன்
படைத்தே வைத்திருக்கின்றான். இம் மாலைக் காலத்தே புல்லியோர் போலத் தாமரை மலர்கள் வண்டென்னும் அப் பாணனை வரவேலாது விட்டன எனினும் இம்மாலைப் போதிலே தன்னிறத்தானும் மணத்தானும் அவ்வண்டுப் பாணனை அம் மல்லிகை வள்ளல் முகனமர்ந்து வரவேற்றுப் புதிய தேனை ஊட்ட அவன் கவலை தீர்ந்து அம்மல்லிகை வள்ளல் அகத்திலேயே புக்கு மலர்ப் படுக்கையிற் றுயில் கொள்ளுகின்றான். இன்னும் அம் மாலைப் பொழுதிலே இனிக் கருங்கால் நாரைகள் சேய்மையிற் சென்று வயலிலே ஆரல் தேர்ந்து தம்மன்புடைய பார்ப்புக்களை எண்ணி அவ்வாரலைத் தம் வயிறே பெரிதென்று உண்ணாமல் தம் கவுளில் அடக்கிக் கொணர்ந்து தம் அருமைப் பார்ப்பினுக்கு வந்து ஈந்து இன்புறுகின்றன, அன்பு! அன்பு! அன்பு!

அன்பர்களே இப் பெருங்கையிற் காணப்படும் இயற்கைக் காட்சிகளும் அவை பற்றுக் கோடாக எழும் சிந்தனை அமிழ்தமும் சாலப் பல. இனி இப் பெருங்கதையில் வருகின்ற ஐந்திணைக் காட்சிகளை ஒரு சிறிது கண்டு இச் சிற்றுரையை முடிப்பாம்.

இலக்கியங்களில் திணை துறை முதலிய வரையறையோடு திகழ்வன இப்பேருலகத்தே செந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே ஆகும். இத் தமிழிலக்கியங்களை மனத்திற்கொண்டே கம்ப நாடரும் 'அகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவிச் சான்றோர் கவிபோலக் கோதாவிரி கிடந்தது' என்று கூறினார். ஈண்டுச் சான்றோர் என்றது தமிழ்ச்சான்றோரையே என்பது
தேற்றம்.