நூலாசிரியர் வரலாறு

இந்நூலாசிரியர் கொங்கு வேளிர் என்னும் நல்லிசைப்புலவர் ஆவார். இப்பெயரானே இப்பெரியார் கொங்குநாட்டிலே சிறந்து விளங்கிய வேளிர் குடியிலே பிறந்தவர் என்பது விளங்கும்

''நீதப் புகழ் உதயேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங் கத்தார் வெள்கவே கொங்குவேள் அடிமை
மாதைக் கொடுத்தறம் சொன்னது வுங்கொங்கு மண்டலமே''

எனவரும் கொங்குமண்டல சதகமும் (99) இதற்குச் சான்றாகும்.

[இதன்கண் ''மங்கை'' என்றது கொங்கு மண்டலத்தில் இப்பொழுது 'விசயமங்கலம்' என்று கூறப்படும் மூதூரினை என்பர் ஆராய்ச்சியாளர்.]

வேளிர்குடி என்பது பண்டைநாள் தமிழகத்திற் சிறந்து திகழ்ந்த பெருங்குடிகளில் ஒன்று. வேளிர்  என்பதன் பொருள் வேளாண் மரபினர் என்பதாம். இம்மரபினர் முடியரசர்க்கு மகட்கொடைக்குரியராகவும் குறுநில மன்னராகவும் இருந்து கோலோச்சி வந்தனர் என்றும் அறிகின்றோம். அழுந்தூர் வேள், நாங்கூர்வேள், இருங்கோவேள் என்பாரும் இவ் வேளிர்  குடித்தோன்றல்களே. இவ்வேளிர்குடி நாட்டினைப் பற்றிப் பதினெண் வகைப்படும் என்பர். அப்பதினெண் வகையுள் ஒன்றாகிய கொங்குவேளிர் குடியிற் பிறந்தமையால் இவர் குடிப் பெயராலேயே வழங்கப்பட்டனர்.  இவர்தம் இயற்பெயர் தெரிந்திலது.

கொங்குவேளிர் புலவர் ஆதலோடு புரவலரும் ஆவார். இவர் தம்  நாட்டில் ஒரு செந்தமிழ்ச் சங்கம் நிறுவித் தமிழ்ப் புலவரைக் கூட்டி அவரையும் தமிழ்மொழியையும் பேணிவந்த பெரியோர் என்று தெரிகின்றது. இவர் இங்ஙனம் தமிழாராய்ந்தே இப் பெருநூலை இயற்றினர் என்பதனை,