பெருங்கதையில் முதற் காண்டம்,
உஞ்சைக் காண்டம் ஆகும். இக்காண்டத்தின் உட்பிரிவு ஐம்பத்தெட்டாகும்.
அவற்றுள் முதலில் முப்பத்தொரு பிரிவு கிடைத்தில. முப்பத்திரண்டு
முதலாகிய மற்றைப்பிரிவுகளே கிடைத்துள்ளன. காடு பெயர்த்தது முதல்
சயந்தி புக்கது வரையுள்ளவை அவை. பிரச்சோதனன், உதயணனை
நோக்கி மதயானையடக்கி வந்த வரலாறும் விஞ்சையும் வினாவுதலும்,
அவ்வமயம் வாசவத்தையும் உதயணனும் ஒருவரை யொருவர் கண்டு காதல்
கொண்டு மயங்குதலும், வாசவதத்தைக்கு உதயணன் யாழ் கற்பித்தலும்,
நருமதை என்ற பரத்தையை உதயணன் காதல் கொண்டிருப்பதாக
வெளிப்படுத்தலும், சாங்கியத்தாய் தன் வரலாறு உதயணனுக்குக் கூறுதலும்,
யாழரங்கேற்றமும், நீர் விழாவும், வாசவதத்தை நீராடலும், யூகி
மறைந்திருந்தவன் பலரையேவி ஊர் தீயிடலும், வாசவதத்தையைக் காக்குமாறு
பிரச்சோதனன் உயணனுக்கு கூறுதலும், உதயணன் வாசவத்தையைப் பிடியிலேறறித்
தன்னூர்க்குச் செல்லுதலும், இடையில் நிகழ்ந்த பல செயல்களும்,
இடையூறுகள் பலவற்றையும் நீக்கி முடிவிற் சயந்தி நகரம் புக்கதும் ஆகிய
பல கதைகளைக் கூறுவது இக்காண்டம்.
இப் பெருங்கதையில் உஞ்சைக்
காண்டப் பகுதியில் உதயணனையும் வாசவதத்தையையும் கூட்டுவிக்கும்
ஊழ்வலியும், யாழ் வித்தை பயிற்றும் அரிய செயலும் வாசவத்தை மேற்
காதல் கொண்டதை மறைக்க நருமதையின் சம்பந்தத்தைக் காட்டும்
உதயணன் சூழ்ச்சியும், வஞ்சகமாகச் சிறையில் வைத்தவன் புதல்வியை
வஞ்சமாகக் கவர்ந்து கொள்வது தான் மன்னர்க்குரிய முறையென ஆய்ந்து
யூகியென்ற அமைச்சன மாறு வேடத்துடன் அந்நகரிலிருந்து வகுத்தமைத்த
பல சூழ்ச்சிகளும், மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை நிலங்கிளின்
வருணனைகளும், வேடர் கையிற் சிக்கிய உதயணன் மீள்வதற்குக் கூறிய
சூழ்ச்சியுரையும், பிறவும் அறிந்து வியக்கத் தக்கனவேயாம்.
|