இம் மகத காண்டம், '' யாத்திரை போகியது ''முதலாக''பறை விட்டது'' இறுதியாக இருபத்தேழு பிரிவுடையது. இவற்றுள்ளமைந்த அகவற்பாக்களின் அடி சுருக்கம் 55,பெருக்கம் 295 ஆகும். 

    வரலாற்றுக்குத் தக்கவாறு அகவற்பாக்களின் அடி குறைந்தும் கூடியும் வருமாறு அமைத்து இருக்கின்றார் ஆசிரியர். இருபத்தேழு பிரிவும் இருபத்தேழு அகவற் பாக்களை கொண்டது எனக் கூறலாமே அன்றி அடி வரையறை கூறவியலாது .உதயணன் மகத நாட்டிற்குச் சென்று இராசகிரியம் என்ற நகரத்தின் புறத்தே தோழர்களுடன் மறைந்து உறைதலும், மகத நாட்டு மன்னன் தங்கையாகிய பதுமாபதி காமவ்வேள் விழாவிற்கு வருவதும் அவளை உதயணன் கண்டு காதல் கொள்வதும், உதயணன் பதுமாபதியின் தோழியாகிய யாப்பியாயினி வாயிலாக வரலாறு தெரிந்து மணக்க விழைவதும், இருவரும் உள்ளப் புணர்ச்சிக் குரியவராய்ப் பின்னர்க் காமவேள் கோட்டத்திற் கள்ளப்புணர்சியால் இன் பந்துததலும்   பதுமாபதி உதயணனைத் தன்னுடன் சிவிகையிலேற்றி ஒருவரும் அறியாமல் அரண்மனை கன்னி மாடத்திற்குக் கொண்டுபோய் வைத்து இன்பந் துய்த்து இருத்தலும், பின்னர் உதயணன் மகத நாட்டு மன்னன் தருசகனோடு நட்பு 
கொண்டு பதுமாபதியை மணத்தலும், மணந்தபின் மகதநாட்டுப் படையுடன் உதயணன் தனது நாட்டிற்குச் செல்வதும் ஆருணி மன்னன் உதயணனோடு போர்புரிய வருதலும், ஆருணியைக் கொன்று வெற்றி பெற்று உதயணன் தன் தலைநகரமாகிய கோசம்பியிற் புகுதலும் ஆகிய பல செய்திகள் இக் காணடததிற்  கூறப்படும். காதலும் வீரமும் கலந்த செய்திகள் இக் காண்டத்தில் வருவதால் இது  மிகவும் சிறந்த பகுதியாகும். கற்போர் கருத்துக் களிப்பெனுங் கடலின் மூழ்கியின்பப்பே றெய்தும் என்பது ஒருதலை.