முகவுரை.
அருந்தமிழன்பர்காள் !
“அரிதரிதுமானிடராதலரிது” என்றபடி பெறுதற்கு அரிய மானிடப்பிறவி யெடுத்ததற்குப்பயன் இம்மையில் நூல்களைக் கற்றலால் நல்லறிவுபெற்று முன்னோர் கடைப்பிடித்த வழியை மேற்கொண்டு அவ்வாயிலாக மறுமையில் நற்கதிபெறுதலேயாம். அதற்காகவே நூல்களில் தலைசிறந்த வேதம் கடவுளால் வெளியிடப்பட்ட தென்பது, வைதிகமதத்தவரெல்லார்க்கும் ஒப்ப முடிந்த பொருளாம். அவ்வேதங்களின்பொருளை யறிவதற்கு ஸ்மிருதி இதிஹாஸபுராணங்கள் ஆகியவற்றை யியற்றினர் பண்டைக்காலத்துப் பெரியோர். அவற்றுள்ளும், ஸ்மிருதி, வேதத்தைப்போலவேயுள்ளது; இதிஹாஸபுராணங்களேயாவரும் ஓதியும் கேட்டும் அறிதற்கு ஏற்றனவாம். இவை வேதத்தின்பொருளை வளர்ப்பன என்ற காரணத்தால் உபப்ரும்ஹணங்க ளெனப்படும். இதிகாஸமென்பதுபழையதொரு சரித்திரத்தைப் பலகிளைக்கதைகளைக்கொண்டு கூறுவதாம். அங்ஙனமுள்ளவை பாரதமும்இராமாயணமுமே யென்பது யாவரும் உடன்பட்ட பொருளாம். அந்தப்பாரதம் நம் தமிழ்மொழியில் வழங்குவதே நம்நாட்டாரால் போற்றுதற்குஉரியது. இவ்வாறாகிய தமிழ் பாரதம் எளியநடை வாய்ந்ததாய்,மிடுக்குள்ளதாய், உள்ளும் புறம்பும் பொலிந்திலங்குஞ் சுவையுடையதாய்,யாவராலும் போற்றப்படுவதாய், நம் வில்லிபுத்தூராராற் கௌடநெறியாற்பாடப்பெற்றுள்ளது. இது எளியநடையை யுடையதேயாயினும் வடமொழி மிகக்கலந்திருத்தலால், தென்மொழியறிவோடு வடமொழியறிவும் இல்லாதவர்க்குஉண்மைப்பொருள் காண்டலரிது: ஆகவே, அப்படிப்பட்டதற்குஉண்மைப்பொருள்விளங்க உரை இன்றியமையாதது. இத்தகைய உரை எனதுகுலமுதல்வர்களான ஸ்ரீ. உ. வே. வை. மு. சடகோபராமாநுஜாசார்யஸ்வாமிகளாலும், ஸ்ரீ. உ. வே. சே. கிருஷ்ணமாசார்ய ஸ்வாமிகளாலும்,ஸ்ரீ. உ. வே. வை. மு. கோபாலகிருஷ்ணமாசார்ய ஸ்வாமிகளாலும்இயற்றப்பட்டு முன்னரே அச்சிடப்பட்டது. எனினும், சபாபருவத்தின்இந்தப்பதிப்பு, முன்னைய பதிப்பினும் செவ்வியுடையதாய், பல அரியவிடயங்கள், இலக்கண நுணுக்கங்கள், உரை விசேடங்கள், கதைக்குறிப்புக்கள்முதலியன இரண்டாம் பதிப்பில் உள்ளபடி சேர்க்கப்பட்டு மிளிர்கின்றது. மற்றும், பயில்வோர்க்குப் பெரிதும் பயன்படும்படி இப்பதிப்பில்,அபிதானசூசிகையகராதி, அரும்பதவகராதி முதலியன, அருந்தொடர்கள்,செய்யுண்முதற்குறிப்பகராதி என்பனவும் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளன.
|