Vi
பொய்கைக் கரையில் விளையாடுமிடம்
அமைக்குமாறு துரியோதனன்
பணியாளரை யேவினான். ஏவலின்படி சென்ற பணியாளரை முன்னரே
அங்கு வந்த கந்தருவர் ஓட்டிவிட்டனர்; அதனையுணர்ந்த துரியோதனனோ
கந்தருவரை யோட்டுமாறு சேனைகளை யனுப்ப, அச்சேனைகளையும் கந்தருவர்
வெருட்டிவிட்டனர். பின்பு கந்தருவர்கட்கும் துரியோதனாதியர்க்கும்
பெரும்போர் நிகழ, அந்தப்போரில் கர்ணனைப் புறங்கண்டு சித்திரசேனனென்ற
கந்தருவராசன், துரியோதனனைக் கட்டித் தன் தேரின்மீது எடுத்துச்சென்றான்.
மற்றுமுள்ள கந்தர்வர் துரியோதனன் தம்பியரையும் அவர் மனைவியரையும்
கட்டியெடுத்துச்சென்றனர். அப்போது துரியோதனனுடைய மந்திரிமார்,
யுதிஷ்டிரனிடம் தெரிவித்துக்கொள்ள, வீமசேனன் மகிழ்ச்சிபாராட்டித்
துரியோதனாதியரை விடுவிக்கக்கூடாது என்று முதலிற் கூறினான். பின்பு
அந்தயுதிஷ்டிரருடைய ஏவலின்படி அருச்சுனன் வீமசேனன்முதலியோர்
சித்திரசேனனுடன் பொர, அப்போரில் அருச்சுனன் சித்திரசேனனை வென்று
துரியோதனனை விடுவிக்க, சித்திரசேனன் அருச்சுனனுக்கு நண்பனானான்.
ஞாதிகளால் விடுவிக்கப்பட்ட துரியோதனன் அவமானத்தைத் தாங்கமாட்டாது
பட்டினிகிடந்து உயிரைத்துறப்பதற்கு முயல, பாதாளலோகவாசிகளான
தைத்தியர்களாலேவப்பட்ட **க்ருத்யையால் துரியோதனன்
பாதாளத்திற்குக்கொண்டுபோகப்பட்டான். ஆங்குள்ள தைத்தியர்கள்
காரணங்காட்டி அந்தத்துரியோதனனது பட்டினிவிரதத்தை ஒழித்தனர்.
க்ருத்யையால் மீண்டும் முன்னிருந்த இடத்திற்குக் கொண்டுவிடப்பட்டுத்
துரியோதனன் தன்நகரத்தையடைந்தா னென்பது.
துருவாசச்சருக்கத்துச்
சரிதைக்குப் பின் வியாசபாரதத்திலே
த்ரௌபதீஹரணபர்வ ஜயத்ரதவிமோசனபர்வங்களிற் கூறியுள்ள சரிதை -
ஒருகால் பாண்டவர் வேட்டையாட வெளிச்சென்றிருந்தபோது தனித்திருந்த
திரௌபதியை ஏதோ காரியமாய் அவ்வழியாய்ச் செல்லும் ஜயத்ரதன் கண்டு
காதல்கொண்டு அன்னாளை வலியக் கவர்ந்துசெல்லலானான். அப்போது
அபசகுனத்தால், மனங்கலங்கி மீண்டுவந்த பாண்டவர் அதுகண்டு
சினங்கொண்டு ஜயத்ரதனைச் சார்ந்தோரைக் கொல்ல, வீமசேனன் ஜயத்ர
தன்முடிமேல் தன் காலைவைத்து அவன் தலையை ஐங்குடுமிவைத்துச்
சிரைத்துக் கட்டியெடுத்துச் செல்ல, யுதிஷ்டிரர் அவனை விடுவித்தார்; பிறகு
அன்னான் பரமசிவனைநோக்கித் தவம்புரிந்து அருச்சுனன் தவிர
மற்றையோரை ஒருநாள் வெல்லுமாறு அந்தப்பரமசிவனிடத்து வரம்
பெற்றானென்பது.
இச்சரிதங்கள்
முக்கியமானவைகளாயிருந்தும் இவ்வில்லிபுத்தூராராற் பாடப்படவில்லை: இவை எக்காரணத்தால்
விடுபட்டனவோ அறிகின்றிலேன்.
**
பெரும்பாலும் வேண்டாதார்க்குத் தீமை விளைக்குமாறு
அமைக்கப்பெறும் பெண் தெய்வம்.
|