பிணத்தைப் பேய்
பிசாசுகள் தூக்கிக்கொண்டுவந்து போட்டு விட்டுப்
போயினவோ! அல்லது வேறு பிணமோ?' என்றையுற்றுக்
கையிலெடுத்தமர்ந்து உற்றுப் பார்த்தாள். அவ்வமையம் 'காசி மன்னன்
மகன் அன்றிரவு காணாமற் போனான்' எனக் காவலர் பலர் தேடி
வந்தவர் இவளைக் கண்டு பிணத்துடன் கைப்பற்றினர்.
இதுவும்
கோசிகன் செய்த சூழ்ச்சியே! கள்வர் பலர் நுழைந்து
காசிமன்னன் மகனை எடுத்துக்கொண்டுவந்து கழுத்தை முறித்துக்
கொன்று நகைகளைக் கவர்ந்து, இவள் வரும் வழியிற் கிடத்திச் சென்ற
செயல்.
காவலர்
சந்திரமதியைக் கட்டியடித்து வைது, 'பிள்ளையைக் கொன்ற
கள்ளி இவள்தான்!' எனக் காசிமன்னற்குக் காட்டினர். சந்திரமதியும் 'நான்
அரக்கி! பிள்ளையைக் கொன்றது உண்மைதான்!' என்றே யுரைத்தாள்.
மன்னன் திகைத்தான்; 'முகமும் கண்ணும் கொலை செய்தவள்போலக்
குறிப்புக் காட்டவில்லை. 'அறியாமற் காவலர் பிடித்து வந்தனர்' என்றே
எண்ணினான். இவள் அடிச்சுவடு அரண்மனையிலிருந்து சென்றதாகத்
தோன்றுகின்றதா எனப் பார்த்து வரும்படி பலரை ஏவினான். கோசிகன்
அதனை யறிந்து, எங்கணும் இவள் அடிச்சுவடே இருக்குமாறு சூழ்ச்சி
செய்தான். பார்த்து வந்தவரும் அப்படியே கூறினர். அரசன்
ஒன்றுஞ்செய்ய வறியாது மீண்டும் விசாரித்தான்; சந்திரமதியும் தான் முன்
கூறியபடியே கூறினாள். கொலைத்தண்டனை விதித்துப் புலையன்
வீரவாகுவை யழைத்து 'இவளைக் கொலைக்களத்திற் கொண்டுபோய்
வெட்டிவிடு!' என்று ஆணை தந்தான். வீரவாகு அவ்வாணையின்படி
சந்திரமதியைக் கட்டிக்கொண்டுபோய்த் தன் பணியாளாகிய
அரிச்சந்திரன்பால் ஒப்புவித்து அரசனாணையும் கூறினன்.
என்ன
செய்வான்? தன் மனைவியைத் தானே கொண்டுபோய்
வெட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டது! சத்தியந் தவறாமல் வாழக் கருதி
வாழ்ந்த மன்னன் நிலைமை கொடுமையினுங் கொடுமையன்றோ?
நகரமாந்தர்
பலரும் பார்த்துப் பலவாறு கூறி வருந்தக் கொலைக்
களம் கொண்டுசென்றான். சந்திரமதியும் நெறி பிறழாது 'என்னைக் கொல்!'
என்று துணிந்து கூறி நின்றாள். அரிச்சந்திரனும் வாய்மை தவறாது
உண்மைப் பணிபுரியும் ஒழுக்கமுடையவ னாதலாற் கொல்லத் துணிந்தான்.
இந்நிகழ்ச்சியை ஞானக்கண்ணாலறிந்த வசிட்டமுனிவர் இந்திரனை
நோக்கி, 'விசுவாமித்திரன் அரிச்சந்திரனுக்கியற்றிய இடையூறனைத்தும்
இன்றே நீங்கிவிடும்; நாம் இங்கிருந்து காண்போம்' என்று கூறி யந்தரத்தில்
வந்தமர்ந்தார். மற்றுமுள்ள திசைக்காவலர் எழுவரும் தேவரும் முனிவரும்
இயக்கர் கின்னரர் முதலிய யாவருங் கூடினர். அந்த வேளையில்
அரிச்சந்திரனிடம் ஓடிவந்தான் கோசிகன்; 'நாட்டை நான் உனக்குக்
|