இவ்வாறு பாடிப் புகழ் பெற்றவர் நெல்லூர் வீரகவிராயர் என்று தெரிகிறது. பிள்ளையார் வணக்க முதற் கலைமகள் வணக்கம் இறுதியாகிய கடவுள் வணக்கக் கவிகள் இவ்வாசிரியர் சிறந்த சைவசமயப் பற்றுடையவர் என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. அரிச்சந்திரன் கதை வடமொழியில் இருந்தது என்பதும், தமிழ் மொழியிலும் வெண்பாவாலாக்கப்பட்டிருந்தது என்பதும் சிறப்புப் பாயிரத்தின்,
  "வண்கவிஞர் வகைவகையே வகுத்துரைத்த வடமொழியுந்
தென்மொழியின் வழுவிலாத
வெண்கவியுங் கண்டு......................நெல்லூர் வீர
கவி ராசனே விருத்தக் கவிசெய் தானே"
என்றும்,
  "வியன்கதையாம் வெண்கவியை விருத்த மாக்கி"

எனவும் வந்துள்ள சொற்றொடர்களால் விளங்கும்.

இந்நூல், திருப்புல்லாணிக் கோயிலில் திருமால் முன்னர்ச் சக்கரதீர்த்தக் கரையிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது என்பதும், சாலிவாகன சகாப்தம் 1446 ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்டது என்பதும் அச் சிறப்புப் பாயிரத்தால் நன்கு விளங்குகின்றன. எனவே, இற்றைக்குச் சற்றேறக்குறைய நானூற்று முப்பத்தெட்டியாண்டுகட்கு முந்தியது எனக் கொள்க. கி. பி. 1523 இந்நூல் அரங்கேற்றிய காலம் எனத் துணியலாம், இந்நூலாசிரியரைக் குறித்து வேறு செய்திகள் ஒன்றும் புலப்படவில்லை.

இந்நூற் சிறப்புப்பாயிரப் பாடல்களுள் ஒன்று அடியிற் காட்டப்படுகிறது:

எண்சீர் அகவல் விருத்தம்

விதியினர சிழந்தவரிச் சந்தி ரன்றன்
வியன்கதையாம் வெண்கவியை விருத்த மாக்கி
அதிவிதமாங் கலியுகத்தில் வருச காப்தம்
ஆயிரத்து நானூற்று நாற்பத் தாறில்
சதுமறைதேர் புல்லாணித் திருமால் முன்னே
சக்கரதீர்த் தக்கரைமேன் மண்டபத்துள்
கதிதருசீர் நெல்லூர்வாழ் வீரனாசு
கவிராசன் வியரங்க மேற்றி னானே.