பதிப்புரை

நமது நாட்டு மொழி தெய்வத்தன்மையுடையது. ஆதலால், மறையாது குறையாது வளர்ந்து நிலவி வருகின்றது. இன்னகாலத்தில் இது தோன்றியதென எவராலும் ஆய்ந்தறியமுடியாத தொன்மையுடையது. கடவுள் எங்கணும் நிறைந்திருப்பதாக எண்ணி அறிஞர் கோயில்கள் எடுத்துத் திருவுருவங்கள் அமைத்து வழிபட்டு வருவது போலத் தமிழ்மொழியையும் பள்ளிகளிற் பல வடிவங்களாக அமைத்து வரைந்து கண்டு வழிபட்டு வருவது மக்கள் கடமையாம். கண்கண்ட தெய்வமாக மொழியெங்கும் காட்சியளிக்கிறது.மொழியின்றேல், மக்களுக்கு அறிவு வளராது. மாக்களைப்போலவே நல்லனவும் அல்லனவும் அறியாது மயங்கி, மனம் போனவாறு வாழ்ந்து மறைவார் மாந்தர். வாழ்க்கையும் துன்ப வாழ்வாகவே தோன்றும்; இன்பவாழ்வைக் காண இயலாது. மொழிவழிக் கல்வி யறிவுக்கண் திறப்பதற்கு வழியாகும். உரை நடையிலும் செய்யுள் நடையிலும் உள்ள இலக்கியம் இலக்கணம் ஆகிய நூல்களைக் கற்று மொழியறிவிற் சிறந்தவரே மக்களிற் சிறந்தவர் என மதிக்கப்படுவார்.

முதலில் இளமையில் மக்கள் பயிலுதற்குரிய நூல்கள் எளிய நடை வாய்ந்த உரைநடை நூல்களேயாம். பின்னர் எளிய இனிய செய்யுள் நடை நூல்களை ஆய்ந்து பயிலுதல் வேண்டும். இக்காலத்தில் உரைநடை நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றிய வண்ணமாக இருப்பதால், இன்ன இன்ன உரைநடை நூல்கள் பயில வேண்டும் எனக் கூறுதல் இயலாது. செய்யுள் நூல்களை வரையறுத்துக் கூற முடியும். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி முதலிய நீதி நூல்கள், அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம், நைடதம் என்ற சிறுகாப்பியங்கள் ஆகிய இவை முதலிற் கற்கப்படுவனவாம். இவை முதலில் ஆசிரியராற் பாடப்பட்ட காலமுதல் இன்றுவரை மறையாது நின்ற மக்கட்கு நல்லறிவை யூட்டி வருகின்றன. இக்காலத்தில் எவரேனும் செய்யுள் நடைநூல் இயற்றின் அது சான்றோரான் மதிக்கப்படுவதும் வழங்கப்படுவதுமின்றி மறைந்தொழிகின்றன. தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய இலக்கணம் இலக்கியம் இன்றுவரை நின்று நிலவுவதற்கு அவ்விரு நூல்களின் தன்மையே காரணமாகும். சிறப்புள்ள நூல்கள் மறையா; நூல்கள் மறையும் என்பதே நாம் கண்ட உண்மையாகும்.