எங்கும் பெருக வழங்கிப் பொது மக்களிடையில் நிலைபேறான ஓர்
இடத்தைப் பெற இயலவில்லை போலும்.
ஐம்பெருங் காவியம்
‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு, தமிழுலகில் நீண்ட
காலமாக வேரூன்றி விட்டது. இவ் வழக்கினை எழுத்துருவில் பதித்தவர் இப்பொழுது தெரிகின்ற
வரையில் நன்னூலின் ‘முதல் உரையாசிரியராகிய மயிலைநாதரே யாவர். நன்னூல் 387ஆம்
நூற்பாவாகிய ‘இன்னது இன்னுழி இன்னணம் இயலும் என்பதன் உரையில்,
|
“இவ்வாறே ஆண்பாற் பொருட் பெயரும்
பெண்பாற் பொருட்பெயரும் ஏனைப்பாற் பொருட் பெயரும் இடப்பெயரும் காலப் பெயரும்
சினைப் பெயரும் பண்புப் பெயரும் தொழிற் பெயரும் மரபுப் பெயரும் ஐம்பெருங்காவியம்
எண் பெருந்தொகை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கியங்களுள்
ளும் விரிந்த உரிச் சொற் பனுவலுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக” |
என்று உரிச்சொல் வழக்குப் பற்றி உரைக்குமிடத்துக் குறிப்பிட்டுளளார்.
எனவே,‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு மயிலைநாதரின் காலமாகிய கி.பி. 14ஆம்
நூற்றாண்டுக்கு முற்பட்டே எழுந்ததாகும் என்பது தெளிவு.
ஐஞ்சிறு காவியம்
ஐம்பெருங் காவியம் என்பது போலவே ‘ஐஞ்சிறு காவியம்’
என்னும் ஒரு வழக்கும் ஒரு சில புலவரால் எடுத்துக் காட்டப்படுகிறது. இது மிக முற்பட்ட
வழக்கெனக் கூறவியலாவிடினும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களிடையே நிலவியிருந்தது
என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. தமிழ்நூற் பதிப்பாசிரியர்களுக்கு ஒரு முன்னோடியாய்
ஏட்டுச் சுவடிகளிலிருந்து நூல்களை அச்சிடும் கலையில் வல்லவராய், பதிப்பாசிரியர்
திலகமாய் விளங்கிய யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் (கி.பி. 1832-1901)
தாம் எழுதிய பதிப்புரைகளில் தமிழ் நூல் வரலாறுகளைத் தொகுத்து எழுதியுள்ளார். அவருடைய
சூளாமணிப் பதிப்புரையில் ஐஞ்சிறு காவியங்களின் அறிமுகம் உள்ளது. அவர் தரும் விளக்கவுரை
வருமாறு.
|
“மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் காலத்தின்
பின்னர்த் தமிழிற்குக் கைகொடுத்துப் பரிபாலனஞ் செய்தவர்கள் சமணரென்பதூஉம்,
இக் காலத்திற் தமிழ் கற்போர் இலக்கண இலக்கியப் பயிற்சிக்காக ஓதிவரும்
நூல்களிற் பெரும்பான்மையின சமணர் காலத்திற் சமணாசிரியர்களால் எழுதப்பட்டன
வென்பதூஉம் முன் வீரசோழியப் பதிப்புரையில் கூறியிருக்கின்றேன்”. |
|