நாககுமார காவியம்

தொகுத்துச் சொல்லப்படும் சூளாமணியை டாக்டர் ஐயர் அவர்கள் பெருங்காப்பியம் எனக் கருதியுள்ளமை இக்குறிப்புரைப் பகுதியால் புலப்படும்.  அரசர்க்குரிய பதினெட்டு வருணனைகள் காணப்படும் நூல்கள், பெருங்காப்பியம் எனும் தகுதிக்குரியவென இவர் கொண்டுள்ளார் என்பது தேற்றம்.

 இவ்வாறாகவே, சூளாமணி ஒழிந்தனவே சிறு காவியங்கள் எனப்படுதல் வேண்டும்.  காவிய நூல்களை ஆராய்ந்த அறிஞர் பலரும் ஐம் பெருங்காவியம், ஐஞ்சிறு காவியம் எனும் பகுப்புள் சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் அத்தகுதி படைத்தன அல்ல எனச் சுட்டிக்காட்டிச் செல்கின்றனர்.1

நூற்றொகைப் பெயரின் பயன்

ஐம்பெருங் காவியம், ஐஞ்சிறு காவியம் எனும் நூற்றொகுப்பு முறை யும் பெயர் வழக்கும் பொருத்தமின்று என்று ஆய்வாளர் கருதிய போதி லும், நூல்களைப் பின்னுள்ளார் அறிந்து போற்றுவதற்கு இவ்வகைத் தொகைப் பெயர்கள் துணை செய்தன என்பது உண்மை.  சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் எழுதிய குறிப்புத் தமிழறிஞர்களுக்கு அந்நூல்களை நினைவு படுத்தத் துணை செய்து வந்துள்ளது.  ஐஞ்சிறு காவியத்துள் ஒன்றாக அவர் கருதிய ‘நாககுமார காவியம் இன்னும் வெளிவர வில்லையே, அதனைத் தேடவேண்டும்’ என்னும் ஊக்கத்தையும் தமிழன்பர்களுக்குத் தந்து வந்திருக்கிறது.  இதன் பயனாகத்தான் இந் நாககுமார காவியமும் இப்பொழுது அன்பர்களால் தெரிந்தெடுத்துப் பாதுகாக்கப்பட்டது.

மூலப்படி

நாககுமார காவியத்தின் கையெழுத்துப் படியைப் பெற்றுச் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ‘தமிழாய்வு’ இதழில் வெளியிடத் தந்தவர் சமண சமயக் காவலர், ஜீவபந்து என்னும் சிறப்புப் பெயர்களைத் தம் தொண்டின் சிறப்பாலே கொண்டு விளங்கும் பெரியார் டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களாவர்.  அவர்களுக்கு இக் காவியப் படியைத் தந்தவர் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள தச்சாம்பாடிச் சைனப் பேரறிஞர் ஜெ.சின்னசாமி நயினார் அவர்களாவர்.

     இவ்விருவரும் இக் காவியம் தமிழகத்தில் உயிர் பெற்று உலவும் வகையில் உதவி புரிந்துள்ளமையினால் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் என்றும் உரியவர்களாவர்.

--------------------------------------------------------------------------------

1.  தமிழ்க் காப்பியங்கள்: கி.வா.ஜகந்நாதன் பக்.117, 126, 131.
  காவியகாலம்-பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, பக்.187-188.
  தமிழ் இலக்கிய வரலாறு-பத்தாம் நூற்றாண்டு மு. அருணாசலம்,பக்.37-38.
  தமிழ் இலக்கிய வரலாறு-டாக்டர் மு.வரதராசன்,சாகித்திய அக்காதெமி
  வெளியீடு, 1972, பக்.150-151.