"புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
          னேறுபோற் பீடு நடை"                     (குறள், 59)
என்னும் திருக்குறளிற்கேற்ப இவனுக்கு வாழ்க்கைத்துணையாக வமைந்த மிகாபதியும் சசியும் ஆகிய தேவிமார் இருவரும்,
 
           "பூங்குழை மகளிர்க் கெல்லாம்
     பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழன் மங்கை மார்கள்
     திலதமாய்த் திகழ நின்றார்"

என்றும்,

"திருமகள் புலமை யாக்கும்
     செல்வியென் றிவர்கள் போல
இருவரும் இறைவ னுள்ளத்
     தொருவரா யினிய ரானார்"
 
     என்றும், இக்கணவன் மனைவிமார்களின் அன்பினை விளக்குவார்,
 
  "மன்னவ னாவி யாவார்
     மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா
     னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே
     லொருவர்தம் முள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம்
     மொய்ம்மலர்க் கணையி னானே"
 
என்றும் கூறி இவ்வரச குடும்பத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். இங்ஙனம் மங்கலமாகிய மனைமாட்சி பெற்ற இவ்வேந்தன் மற்று அதற்கு நன்கலமாகத் திங்கள் வண்ணனாகிய விசயனையும் கார்முகில் வண்ணனாகிய திவிட்டனையும் மக்களாகப் பெற்று மகிழ்கின்றான். சான்றோர் கேண்மை யோடும் சிறந்த வாழ்க்கைத்துணைவியரோடும் ஒப்பற்ற மக்களோடும் திகழ்கின்ற இவ்வரச குடும்பம் ஓர் அனபுக்கடலாகவே காட்சியளிக்கின்றது. இவ்வரச குடும்பம் கம்பநாடர் காட்டும் தசரத மன்னனுடைய குடும்பத்தையே பெரிதும் ஒத்துத் திகழ்கின்றது. இங்ஙனம் கூறுங்கால் கம்பர் காவியத்திற்கு இக்காவியமே படிச்சந்தமாக அமைந்தது என்பது நம் கருத்தாகும்.

இக்காவியத் தலைவனாகிய திவிட்டனையும் விசயனையும் கருதுங்கால் வைணவசமயத்தார் கூறும் மாயோனையும் பலதேவனையும் நாம் நினையாதிருத்தல் இயலாது. பல்லாற்றானும் இவர்கள் மாயோனையும் பலதேவனையுமே ஒத்துத் திகழ்கின்றனர்.