புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 7
ஏழ்கடல்சூழ் தென் னிலங்கைக்கோமானை எழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலும் மதில்புல்கி யழகமரும் நீண்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 8
ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவ ரறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 9
குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகம்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 10
கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே. 11 |