xLviii வணக்கம் முதற்கட் கூறிய தென்னென வினவிய புலவர்கள் முன்னிலையில்
சுவாமிகளின் தலையாய மாணவராம் கச்சியப்ப முனிவரர் அவையிலிருந்த
ஓதுவாரைத் திருவேகம்பர் தேவாரம் ஓதுமாறு கூறித் ‘திருச்சிற்றம்பலம்’
எனத் தொடங்கிய ஓதுவாரைத் தடுத்து இத்தலம் பிருதிவி ஆகலின் பிருதிவி
அம்பலம் தொடங்காமையே அமையும் என அறிவுறுத்தப் புலவர்கள்
சுவாமிகளின் மாணவர்தம் மதிநுட்பங்கண்டு மகிழ்ந்தனர். இவ்வாறாகக்
காஞ்சிப் புராணம் அரங்கேற்றம் பெற்றுச் சிறந்தது.
சுவாமிகள் காஞ்சியில் தங்கியிருந்த காலங்களில் பல்வகையினும் உதவி
புரிந்துவந்த பிள்ளையார் பாளையம் மணியப்ப முதலியார் உதவியைக் காஞ்சிப்
புராணத்துள் அமைத்தனராகவும் முதலியார் அதற்கு இசைவுதாராமையின்
மாற்றினரெனவும் கூறுப. மேலும், முதலியார் கச்சியப்ப முனிவரருக்கும்
அவ்வாறு வேண்டுவ யாவும் பொருளாலும் செயலாலும் முற்றுப்பெறுவித்தனர்
என்ப.
தொட்டிக்கலைக் கேசவ முதலியார் என்னும் பெருஞ்செல்வராகிய
மெய்யன்பர் விருப்பின்படி சுவாமிகள் அவரூருக்கு உடன் சென்று அங்குக்
கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சிதம்பரேசர்மீது கலைசைப் பதிற்றுப்
பத் தந்தாதியும் அவ்வூர் விநாயகர் மீது செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்
தமிழும் பாடி அரங்கேற்றி அவரை மகிழ்வித்தனர்.
பின்பு சிலநாட்கள் கழித்துத் திருவாவடுதுறையை அடைந்து
ஞானாசிரியரை வணங்கி அடியார்களோடும் கலந்திருந்து கி. பி. 1785க்கு ஒத்த
மெய்கண்டான் யாண்டு 562, சாலிவாகன சகாத்தம் 1708 விசுவாவசு ஆண்டு
சித்திரைத் திங்கள் எட்டாம் வைகல் ஞாயிற்றுக்கிழமை ஆயிலியம் கூடிய
நன்னாளில் பகற்பொழுதில் இறைவன் திருவடி நீழலை எய்தினர்.
மன்னு விசுவா வசுவருட மேடமதி
உன்னிரவி நாட்பகலோ தாயிலியம் -- பன்னுந்
திருவாளன் எங்கோன் சிவஞான தேவன்
திருமேனி நீங்கு தினம். |
22ஆம் பரிவிருத்தியில் வரும் விசுவாவசுச் சித்திரை 8ஆம் நாள் ஆயிலியம்
கணித சோதிடத்திலும் கண்டது. இப்பொழுது 25ம் பரிவிருத்தி விசுவாவசு
எதிர்வர இருத்தலின் இன்றைக்கு 178 ஆண்டுகள் முன்பு ஸ்ரீமாதவச் சிவஞான
சுவாமிகள் இறைவன் திருவடி கூடியமையை உணர்த்தும்.
|