Lvi

அதற்கேற்ப அப் புராணத்தைத் தமிழிற் பாடியருளிய ஆசிரியரும் மிகச் சிறப்புடையவராய் அமைந்தமை மேலும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

காஞ்சித் தலபுராணம் இரண்டு பகுதிகளை உடையது; அவை இரண்டும், ‘இரண்டு காண்டங்கள்’ எனப்படுகின்றன. எனினும், உண்மையில் அவை இரண்டும் இரண்டு தனி நூல்களே. அவை இரண்டிற்கும் வடமொழி முதல் நூல்கள் வேறு வேறே. தமிழ்க் காஞ்சிப் புராணத்தின் முதற்பகுதி, திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச் சிவஞான யோகிகளாலும் இரண்டாம் பகுதி, அவர்தம் மாணாக்கர் கச்சியப்பமுனிவரராலும் பாடியருளப் பெற்றன.

காஞ்சிப் புராணத்தின் முதற்பகுதியே மிக்க பொருள்களையுடையது. அதனால், அஃது ஒன்றே, ‘காஞ்சிப் புராணம்’ எனப் பலராலும் போற்றப்படுகின்றது. அதன்கண் எப்புராணங்களின் பொருளையும் காணலாகும். அதனை இயற்றியருளிய ஆசிரியர், வடநூற் கடலும் தென்னூற்கடலும் நிலைகண்டு உணர்ந்தமையோடு, சிவஞான போதத்திற்கு அரும்பேருரையாகிய மாபாடியம் வகுத்த மாண்பினராதலின் வேத சிவகாமப் பொருள்கள் பலவும் நிறைந்து விளங்குமாறு அதனை ஆக்கி அளித்துள்ளனர். அதனால், சைவநெறியினை உணர விரும்புவோர் பலராலும் அப்புராணம் இன்றியமையாது ஓதியுணரப் பெற்று வருகின்றது.

இப்புராணத்திற்குப் பதவுரை, விசேட உரைகளுடன் கூடிய பழைய பேருரை ஒன்று உண்டு; அதன் முற்பகுதி சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்களாலும், பிற்பகுதி காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளையவர்களாலும் எழுதப்பட்டன. அவ்வுரை மிக விரிந்ததாய் விளங்கியிருந்து பின்னர்க் கிடைத்தல் அரிதாயிற்று. அது போழ்து என்னால் எழுதப்பட்ட குறிப்புரை உரைநடைகளுடன் அப்புராணத்தைக் காஞ்சிபுரம் மெய்கண்டார் கழகத்தினர் 1937-ம் ஆண்டில் வெளியிட்டனர். அதுவும் பல ஆண்டுகளாகக் கிடைத்தல் அரிதாகிவிட்டது. அதனால், இரண்டாவது பதிப்பாக அதனை வெளியிட வேண்டும் என்று பலர் சொல்லிவந்தனர். பொருள் கைகூடாமையால் அவ்வெளியீடு செய்யப்பெறவில்லை.

இந்நிலையில் அப்புராணத்தைக் காஞ்சிபுரம் தவத்திரு. பொன். குமாரசுவாமி அடிகளார், தம் முன்னை ஆச்சிரமத் திருமகனார் திரு. பொன். சண்முகனார் அவர்களைக் கொண்டு எழுதுவித்துத் தெளிவான சுருங்கிய பொழிப்புரையுடன் வெளியிடுவது மகிழ்ச்சிக்குரியதாகும். தவத்திரு, அடிகளார் அவர்கள் காஞ்சிப் புராணத்தின் இரண்டாங் காண்டத்தை முன்னரே திரு. சண்முகனார் அவர் எழுதிய குறிப்புரையுடன் வெளியிட்டுள்ளார்கள். அதனுடன் அப்புராணத்தின் முதற் காண்டத்தையும் இப்பொழுது பொழிப்புரையுடன் வெளியிடுகின்றார்கள்.