Lvii

திரு.பொன். சண்முகனார் அவர்கள் இயற்கை மதி நுட்பத்தோடு, பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், சிந்தாந்த நூல்களிலும் சிறந்த பயிற்சியுடையவர்கள். சேனாவரையர், பரிமேலழகர் போன்ற பேருரையாசிரியர்களது உரைகளின் நுண்ணிய போக்கினையும் நோக்கினையும் ஊன்றி உணர்ந்தவர்கள். கச்சியப்பமுனிவரர், கச்சியப்ப சிவாசாரியர் முதலிய அருட்புலமையாளரது செய்யுள் நலங்களில் பழகித் திளைத்தவர்கள். ஆகவே, அவர்களது பொழிப்புரை காஞ்சிப்புராணத்தின் பொருளை நன்கு உணர்வதற்குப் பெரிதும் துணைபுரிவதாதல் உறுதி. ஆனால், இதனை எழுதியுதவிய திரு. பொன். சண்முகனார் அவர்களிடத்தும், இதனை எழுதுவித்து வெளியிடும் தவத்திரு. அடிகளாரிடத்தும் சைவ உலகமும், தமிழுலகமும் என்றும் குன்றா நன்றியறிவுடன், இவ்வுரையினைப் பெற்றுப் பயன் அடைவனவாகுக.

தருமபுரம்,
27-7-’63

இங்ஙனம்
சி. அருணைவடிவேல் முதலியார்

 

திரு. டாக்டர். மா. இராசமாணிக்கனார், எம்.ஏ.,எல்.டி.., எம்..ஓ.எல்.,
 பி.எச்.டி.,
(Readar in Tamil) பல்கலைக்கழகம், சென்னை.

அணிந்துரை

“கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்’’ என்று திருநாவுக்கரசரால் பாராட்டப்பெற்ற கச்சியம்பதியில் சைவ சமயத் தொண்டாற்றி வரும் பொன். குமாரசுவாமியடிகள் “செங்குந்தர் நூற் கோவை’’ யைப் பதிப்பித்தவர்; “செல்வ விநாயகர் பதிகம்’’, “கச்சி ஏகம்பர் மாலை’’ என்னும் சிறு நூல்களைப் பாடியவர்; தமிழகத்திலும் இலங்கையிலும் சைவ சமயச் சொற்பொழிவுகள் ஆற்றிப் புகழ்பெற்றவர்.

இப்பெரியார் காஞ்சிப் புராணத்திற்கு உரை எழுதி, அந்நூலைப் பெரிய அளவில் அச்சிட்டுள்ளார். இது போற்றத்தகும் நன் முயற்சியாகும். உரை மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளது; நூலிற் கூறப்பட்டுள்ள எல்லாக் கோவில்களும் இவை இவை என்று எளிதில் அறிந்துகொள்ளும்படி நூலின் இறுதியில் தலங்களின் விளக்கம் கொடுத்திருப்பது கற்பார்க்கு மிகுந்த பயனைத் தருவதாகும்.

இத்திருப்பணியில் இவர்தம் செல்வ மைந்தரும் நற்றமிழ்ப் புலவருமாகிய திரு. பொன். சண்முகனார் தந்தையார் உடனிருந்து அரிய தொண்டு செய்துள்ளார்.

இச்சிவத்தொண்டு செய்துள்ள அடிகளார்க்கும் அவர்தம் திருமகனார்க்கும் சைவ உலகமும் தமிழ் இலக்கிய உலகமும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையது. இப்பெருமக்கள் நீடுவாழ்ந்து மேலும் இத்தகைய நற்பணிகளைச் செய்யுமாறு இறைவன் திருவருளை வேண்டுகிறேன்.

மா. இராசமாணிக்கனார்.