திருத்தல விளக்கம்

807

அவ்வியானையைக் காத்து அதன் பூத்தொண்டினைக் கொண்டு சிவபிரானை அருச்சித்து ஆங்குச் செய்யப்படும் புண்ணியம் ஒன்று கோடியாகவும் ‘வரதா வரதா’ என இறைவனைப் பலமுறை எதிரெழுந்தருள்கையில் போற்றி, வரதராசன் என்னும் திருப்பெயர் தனக்கு உண்டாகவும் வரம் அருளப்பெற்ற திருத்தலம். சின்ன காஞ்சிபுரம் அமுதுபடித் தெருவின் பின்னுள்ளது இது.

     சிவாத்தானம்: பிரமன் திருமாலொடும் உலகைப் படைக்கும் ஆற்றலை வேண்டிக் கயிலைப் பெருமானார் ஆணைப்படி புண்ணிய கோடீசத்திற்குக் கிழக்கில் ‘தேனம்பாக்கம்’ என்னும் இடத்தில் பிரம தீர்த்தம் தொட்டுக் கரையில் சிவலிங்கம் தாபித்துப் போற்றினன். பின்பு சோமயாகம் தொடங்குகையில் தேவர் முனிவர் சூழ்ந்திருக்கும்போது சரசுவதி நீரினும், பின்பு மரங்களினும் சூக்குமவடிவிற் கரந்தனள். மனைவியாகிய சரசுவதியைக் காணாது சாவித்திரி காயத்திரி ஆம் மற்றைய இரு மனைவியரொடும் பிரமன் யாகம் செய்தனன். பிரமனைக் கண்டு வெகுண்ட சரசுவதி நதியுருவாய் யாகத்தை அழிக்க வருகையில், வேள்வித் தலைவராகிய சிவபெருமானார் வேள்வி வடிவினராகிய திருமாலை ஏவ அவர் மூன்று முறை கிடந்து தடுத்துக் கடலை நோக்கிச் செலவிட்டனர். சிவபிரானார் தோன்றி, ‘திருமாலே, நீ யாம் சொன்ன வண்ணம் செய்தமையின், ‘சொன்ன வண்ணம் செய்தவன்’ எனவும், இரவிருளில் நதியைக் காணவேண்டி விளக்கொளியாய் நின்றமையின், ‘விளக்கொளிப் பெருமாள்’ என்னும் பெயர் பெற்று எவரையும் இன்புறுத்துக’ எனவும் அருளி மறைந்தனர்.

     நதியுருவம் மாறி மீண்டும் மரவடிவில் மறைந்த சரசுவதியை அம்மரத்திற் றண்டுகொண்டு இருத்துவிக்குக்களால் வேறு பிரித்து உருவுகொண்ட அவளுடன் யாகத்தை செய்து முடித்தனன் பிரமன். காட்சி வழங்கிய அம்மை அப்பர் திருவடிகளை வணங்கி இத்தீர்த்தத்தில் மூழ்கினவரும், இவ்விலிங்கத்தை வழிபட்டவரும் முத்தியை அடையவும், தன்னுடைய இருக்கையாகிய அத்தானத்தைச் சிவபிரானுக்கு வழங்கினமையின் சிவாத்தானமென வழங்கவும் வரம் பெற்றனன். மேலும், திருமாலையும் உலகங்களையும் படைக்கும் ஆற்றலையும் பெற்றனன்.

     முத்தீசம்: காசிப முனிவர் மனைவியாகிய கத்துரு, சுபருணை தத்தம் அழகைப் பாராட்ட நடுநின்ற கணவர் கத்துரு அழகின் மிக்கவள் என்றமையின், தோற்ற சுபருணை, தங்களுள் ஒட்டியவாறு சிறையிடைப் பட்டனள். தேவ அமுதம் கொடுப்பின் விடுதலை பெறுவை என்ற கத்துருவின் விருப்பத்தை நிறைவு செய்யச்