810 காஞ்சிப் புராணம்

எழுவரும் தத்தம் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றுகையில் பெருமான் காட்சி தந்து ‘வைவச்சுத மனுவந்தரத்தில் நீவிர் ஏழ்முனி வரராமின்; முடிவில் முத்தியையும் வழங்குவோம்’ ஏழிடங்களில் வணங்குவோர் வினைப் பிணிப்பின் நீங்கி இம்மை மறுமை இன்புடன் வீட்டினைத் தலைப்படுவர் என அருளி மறைந்தனர்.

இத்தலங்கள் சின்ன காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருப் புளியந் தோப்பிலுள்ளன.

பராசரேசம்: வசிட்டர் மாட்டுத் தீராப் பகைகொண்ட விசுவாமித்திரர், வசிட்டர் சாபமேற்று அரக்கனாய சுதாசன் என்னும் அரசனைத் தூண்ட அவன் வசிட்டர் புதல்வர்களாகிய சத்தி முதலாம் நூற்றுவரையும் விழுங்கினன். கேள்வியுற்ற வசிட்டர் மனைவி அருந்ததியோடும் வருந்திப் புத்திர சோகத்தால் உயிரைவிடத் துணிந்து மலைமேல் ஏறி வீழ்ந்தனர். பூமாதேவி தாங்கிப் பிழைப்பித்தனள்.

வசிட்டர் மூத்த மகனாகிய சத்தியின் மனைவி கருப்பம் சிதையுமாறு வயிற்றில் அடித்துக் கொண்டனள். ‘சந்ததியை அழிக்காதே’ என்னும் வசிட்டர் ஆணைக் கஞ்சிய வழிக் கருவில் இருக்கும் குழவியின் அழுகுரல் கேட்டது.

அப்பொழுது திருமால் எதிரெழுந்தருளி ‘அறிவான் மிக்கு என்னை ஒப்பவனாய்ச் சிவபிரானிடத்து மெய்யன்புடையனாய்க் குலந்தழைக்க மகனுக்கு மகன் இப்பொழுதே தோன்றுவன்’ என்றருளி மறைந்தனர்.

சத்தி மனைவியாகிய அதிர்சந்தி மகப்பெற்றுச் சடங்குகளுடன் இளம் பிறைபோல் வளர வளர்க்கும் நாளில் அன்னை மடியிலிருந்த குழவியாகிய பராசரர் தன் தாயை நோக்கி ‘மங்கல மின்றி இருப்ப தென்னை’? என் தந்தை எங்கே என வினவினர். வசிட்டர் முதலானோர் வருந்தி யழுமாறு ‘தந்தை முதலானோரை அரக்கன் விழுங்கினன்’ என்றனள் தாய். ‘உலகை விழுங்குவேன்’ என்ற பெயரனை நோக்கி ‘உலகம் என் செய்யும்? அரக்கர் குலத்தை வேரொடும் களையச் சிவபூசனையைத் தனக்கு ஒத்ததும் உயர்ந்ததும் இல்லாத காஞ்சியில் ஓர் நாள் செய்யினும் திருவருள் வாய்க்கப் பெறும்’ என்னும் வசிட்டர் மொழியைச் சிரமேற் கொண்டு காஞ்சியை நண்ணிக் கம்பா நதியில் மூழ்கித் திருவேகம்பரை வணங்கி மஞ்சள் நதிக்கரையில் மணிகண்டேசத்திற்கு வடமேற்கில் ‘பராசரேசர்’ எனச் சிவலிங்கம் நிறீஇப் போற்றி வழிபட்டனர் பராசரர். காட்சி தந்த சிவபிரானார் ‘மைந்தனே நின் பூசனையால் எம்மை அடைந்து உன்னைக் காணப் போந்த நின் தந்தையைக் காண்க. ஓர் யாகம் செய்து அதில் அசுரர்களை நீறு செய்க. இந்தச் சிவலிங்கத்தில் என்றும் வாழ்வோம்’ என்றருளி மறைந்தனர்.

அங்ஙனமே வேள்வியால் அரக்கர் பலரை அழிவு செய்து முனிவர் உரையால் முனிவு தீர்ந்து வாழ்ந்தனர் பராசரர். இத்தலம் செட்டி கோயில் என விளக்கம் பெற்றுக் காந்திரோடில் உள்ளது.