812 காஞ்சிப் புராணம்

கில்லாத திருமால் பிரமர்கள் இறக்க அவர்கள் எலும்புகளை மாலையாக அணிந்து அவர்கள் தம் அநித்தியத் தன்மையையும் நம் நித்தியத் தன்மையையும் உன்போன்றவர்க்குக் கண்கூடாகக் காட்டி நிற்கின்றோம்! என அருளினர். பின்னும் வேதமுடிபைக் கண்டுணர்ந்த தலைவர்தம் தலைவனாகிய நீ எம்மைப் பூசித்து முத்தியை அடைவாயாக’ என அருளித் திருவுருக் கரந்தனர்.

வியாசர் நெடிது சிந்தித்து இம்மயக்கம் ‘எனக்கு வந்ததற்குக் காரணம் தவம் செய்வோர்க்குத் தேவர்கள் இடையூறாய் நின்று அறிவை மயக்குவர் என்ப. அது என்னளவில் உண்மையாயிற்று’ எனத் துணிந்து காஞ்சியை அடைந்தனர். சிவகங்கையில் மூழ்கித் திருவேகம்பரைப் பணிந்து மணிகண்டேசத்திற்குத் தென்மேற்கில் சார்ந்தாசயப் பெருமானைத் தாபித்துப் பூசித்தனர். பெருமான் வெளி நின்று வேண்டுவ கேளென, அச்சிவலிங்கத்தில் என்று நீங்காதிருந்து யாவர்க்கும் அருளும் தனக்குத் திருவடியில் இடையறா அன்பும் வழங்கியருளவேண்டுமென்றனர். பெருமான் அவர்க்கு அவற்றை அருள்செய்து திருவுருவிற் கரந்தனர்.

சித்தீசம்:- இமய மன்னர் மகளார், கம்பை நதிக்கரையில் தவஞ்செய் காலத்தில் மஞ்சட் காப்பினைத் திருமேனியில் திமிர்ந்து முழுகிய வெள்ளப் பெருக்கு நறுமணம் பரந்து பாய்ந்து மஞ்சள்நீர் நதி என்னும் பெயரொடு அயலெலாம் இடங்கொண்டு செல்லும் அளவே கங்கை சடைப் பிரானார் அருளடங்காது மீதுவழியும் மகிழ்ச்சியொடும் சிவலிங்க வடிவாய் அவ்விடத்தே முளைத்தனர்.

அக்காரணத்தால் அவருக்கு ‘மஞ்சள்நீர்க் கூத்தர்’ என்னும் திருப் பெயர் வழங்கினர். நடம்புரியும் திருவடிகளைச் சித்தர் மிகப்பலர் அணைந்து போற்றிப் பெருஞ் சித்திகளைப் பெறுதலினால் பெருமை நிரம்பிய சித்தீசர் என்னும் திருப்பெயரானும் உலகரால் போற்றப்பெறுவர். அவ்வண்ணலார் திருமுன்பில் கிணறு ஒன்றுள்ளது. அத்தீர்த்தத்தில் ஞாயிறு, சனிக்கிழமைகளில் முழுகிப் பெருமானை வணங்கும் வெற்றி வாழ்க்கையர்க்குப் பிறவி நோய் ஓட்டெடுக்கும். இத்தீர்த்தம் சித்த தீர்த்தம் எனப்பெறும். இத்தலம் குயவர் வீதியில் மஞ்சள் நீர்க்கரைக் கண் உள்ளது.

இட்ட சித்தீச்சரம்: பிருகு முனிவர் மரபின் வந்த ததீசி முனிவர் குபன் என்னும் அரசனொடு நட்புப் பூண்டு அளவளாவு நாளில் அந்தணர் சிறப்புடையரோ? அரசர் சிறப்புடையரோ என விளையாட்டு விருப்பினராய் அசதியாடினர். அந்தணரைப் பாராட்டினர் முனிவர். அரசரைப் போற்றினர் அரசர். சொற்போர் முதிர்ந்து மற்போராயது, முனிவர் வெகுண்டு அரசனைத் தாக்க, அரசன் சினந்து வச்சிராயுதத்தால் முனிவரை இருகூறுபட வெட்டி வீழ்த்தினான். முனிவர் சுக்கிரனை மனங்கொண்டு தரையில் உருண்டனர்.