அடைந்து அதன்கண் வாழும் மீன்கள் காட்டிக்கொடுக்கக் கண்டு கூவி
அழைக்கும் தேவர்களை முன் போகவிட்டுப் பின்பு மீன்களைத் தூண்டிலிற்
படுகெனச் சாபமிட்ட அக்கினி அக்குளக்கரையில் வன்னீசரைத் தாபித்துப்
பூசித்து அவிசுமக்கும் ஆற்றலைப் பெற் றேகினன். இவ்விரு தலங்கள்
மாண்டகன்னீசர் தெருவில் உள்ள ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் உள்ளன.
சவுனகேசம்: சவுனகமுனிவர் தம்பெயராற் சிவலிங்கம் நிறுவிப் போற்றி
மலநோய் நீங்கி முத்தி எய்தினர். இக்கோயில் புத்தேரி தெருவை அடுத்துள்ள
சவுனகேசர் தெருவில் உள்ளது.
சுரகரேசம்: வெப்பு நோயைக் கண்களால் பிறர்க்கு ஆக்குதலால்
சுராக்கன் என்னும் பெயருடைய அசுரனை அழிக்கச் சிவபிரான் ஆக்கிய
தலமும், சுரநோயைப் போக்குதலின் ‘சுரகரம்’ என்னும் தீர்த்தமும் உடைய
அவ்விடத்தே சிவவீரியத்தைத் தேவர்கள் பொருட்டு அக்கினி உட்கொண்டு
கருப்பத்தால் வெப்பமுற்ற தேவர் அனைவரும் இறைவன் ஆணைப்படி
இத்தீர்த்தத்தில் மூழ்கிச் சுரகரேசரை அருச்சித்துச் சுரம் நீங்கப்பெற்றுப்
போய்க் கங்கையில் விடுத்த வீரியம் சரணவப் பொய்கையில் தங்கி வளர்ந்து
ஆறுமுகப்பெருமான் ஆக அருள விளங்கும் தலம் இது. இத்திருக்கோயில்
திருவேகம்பர் சந்நிதி வீதியில் உள்ளது.
அமரேசம்: தேவரும் அசுரரும் பலயுகம் பொருது வெற்றி தோல்வி
காணாராயினர். போர் முற்றுப்பெற உமையம்மையார் விரும்பச் சிவபிரானார்
சிறிது ஆற்றலை அசுரரிடத்து வைத்துத் திருமால் முதலியோரைத்
தோல்வியுறச் செய்தனர். பின்பு அம்மையார் கருத்தாகத் தேவரை
வெற்றிகொளச் செய்தனர். வெற்றிக்குக் காரணம் தான் தாமென மயங்கிச்
செருக்கிய திருமால் பிரமன் இந்திரன் முதலானோர் முன்பு :யட்சனாக
வந்தபெருமானார், துரும்பை நிறுத்தி இதனை எறிய வல்லவர் வென்றவர்
ஆவர் எனத் தனித்தனி முயன்று இயலாமையின் நாணிய அத்தேவர்
முன்னின்றும் மறைந்தனர். திகைக்கும் தேவர்முன் உமையம்மையார் தோன்ற
யாவரும் துதி செய்தனர்.
‘சிவனருளின்றித் துரும்பையும் அசைக்கமுடியாத நீவிர்
தற்போகத்தினால் எழுந்தருளியிருந்த பெருமானைக் காணீர் ஆயினீர்.
எப்பொருளின் கண்ணும் விளங்கும் எவ்வகை ஆற்றலும் அவனருளிய
ஆற்றலே என்னும் உண்மையை மறந்து தருக்கிய நீங்கள் பிழைதீரக்
காஞ்சியிற் சிவபூசனை புரிமின்’ என அருளி மறைந்தனர். அம்மையார்
அருளியவாறு காஞ்சியில் திரிதசர் ஆயதேவர் ‘திரிதசேச’ரைத் தாபித்துப்
பூசித்துப் பெருவலி பெற்றனர். இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அமரேசர்
கோயில் தெருவில் உள்ளது.
திருமேற்றளி: (தளி-கோயில்) உருத்திரர் நூற்றுவரும் பிறரும்
வழிபட்ட நூற்றுப்பதினெட்டுத் தலங்கள் உள்ளன. அத்தலங்கள் என்றும்
தபோதனர்களால் பூசிக்கப்படுகின்றன. அவற்றுள் திருமேற்றளியும் ஒன்று.
|