குருபாதம்

தருமையாதீனத்தை நிறுவியருளிய

ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் வரலாறு

ஞானக் குழந்தை

தமிழகத்தில் - தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கார்காத்த வேளாளர் மரபில் சுப்பிரமணிய பிள்ளை மீனாட்சியம்மை என்ற நல்லறப் பெரியோர்கட்கு அருந்தவ மகவாகப் பதினாறாம் நூற்றாண்டில் அவதரித்தவர். தருமையாதீன முதற் குருமூர்த்திகளாகி ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் இவருக்குப் பெற்றோர்கள், திருஞானசம்பந்தரைப்போல் தமது குழந்தையும் சிவஞானம் பெற்றுச் சைவம் வளர்க்கும் ஞானாசிரியனாகத் திகழ வேண்டும் என்று எண்ணி ‘ஞானசம்பந்தம்’ என்ற நற்பெயரைச் சூட்டி வளர்த்து வருகையில், தமது குலதெய்வமாகிய சொக்கநாதரையும் மீனாட்சியம்மையையும் தரிசிப்பதற்கு ஞானசம்பந்தருடன் மதுரை சென்று பொற்றாமரைத் தடாகத்தில் நீராடி வழிபட்டனர். பெற்றோர்கள் ஊருக்குப் புறப்படுங்கால் ஞானசம்பந்தர் தொடர்ந்து நின்ற தாயும் தந்தையுமாகிய சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, உடலுக்குத் தாய் தந்தையர்களாகிய பெற்றோர்களுக்கு விடை கொடுத்தனுப்பிச் சொக்கநாதர் வழிபாட்டிலே ஈடுபாடு கொண்டவரானார்.

கண்ணுக்கினிய பொருள்

நாள்தோறும் பொற்றாமரைக் கரையில் அடியார்கள் சிவபூசை புரிவதைக் கண்டார் ஞானசம்பந்தர். தாமும் அவ்வாறு சிவபூசை புரிய எண்ணினார். சொக்கநாதரை வேண்டினார். கருத்தறிந்து முடிக்கும் கண்ணுதற்கடவுளும் அன்றிரவு கனவில் தோன்றி, ‘நாம் பொற்றாமரைத்