17

யாவர் யாது செய்யினும் பொருள் தருவாரையின்றி இவ்வுலகில் யாதும்
இல்லை என்பது துணிபேயன்றோ? பொருளிலார்க் கிவ்வுலகமில்லை யென்று
முடித்தனர் நாயனார். இவ்வெளியீடு மிக்க பொருட் செலவில்
இயல்வதொன்றென்பது வெளிப்படை. இதனைப் பெறுதலும் - பெற்றுக் கற்று
அறிந்துகொள்ளுதலும் இலகுவாயிருக்கும்படி உயர்ந்த கடிதத்தில் ராயல் 8
பக்கம் கொண்ட 20 பாரங்கள் (160 பக்கம்) கொண்ட சஞ்சிகைகளாகக்
குறைந்த விலைக்கு வெளியிடப்பெறுகின்றது. இதனைத் தமிழுலகம் ஏற்று
ஆதரித்து வருதல் அடியேன் செய்த பாக்கியமே. இவ்வெளியீட்டிற்குச் சென்னைச் சர்வகலாசாலைச் சங்கத்தார் மிக அன்புடன் ரூ.1000/- இதற்கு
நன்கொடை தருவதாகத் தீர்மானித்து அதிற் பகுதியை இப்போதே
உதவியுள்ளார்கள். மற்றைப் பகுதியை வெளியீட்டு இறுதியில் தருவதாக
வைத்துள்ள கருத்து இதன் நிறைவைக்காணும் அவர்களது ஆவல் மிகுதியைக்
குறிக்கின்றது. முன்னர்க் குறித்தபடி இவ்வுரையில் எண்ணத்தைத் தூண்டியும்,
உரை வெளியீட்டிற்கு நன்கொடை அளித்தும் உதவிய சர்வகலாசாலையாருக்கு
என் மனமார்ந்த நன்றி உரியது. இளம் பிராயத்தில் என்னோடு ஒருசாலை
மாணவரானவரும் சென்னை அரசாங்க விவசாயக் கல்லூரித் தலைவராயிருந்து
விடுதி பெற்றவரும் ஆகிய என் அரிய நண்பர் இராவ்பகதூர் திரு. சி.
தாதுலிங்க முதலியாரின்
நன்கொடை ரூ. 500/-ம் கோயமுத்தூர் சில்லா
தேவஸ்தான சபையார்களின் நன்கொடை ரூ. 250/-ம் மிக நன்றியோடு
பாராட்டற்குரியன. இன்னும் இதுபோலவே பல்லாற்றானும் இதற்குப்
பொருளுதவி புரிந்தூக்கிவரும் எல்லா அன்பர்கட்கும் மனமார்ந்த நன்றி
செலுத்துகின்றேன். இவ்வெளியீடு முற்றுப்பெறும்வரை இவ்வாறே தமிழுலகமும்
சைவ உலகமும் இதனை ஆதரிக்கவேண்டுகிறேன். தமிழ்நாடுகளுள்ளே
இலங்கையிலுள்ள அன்பர்கள் பலர் இதனை மிக ஆதரித்து ஊக்கமளித்து
வருதல் எனது பாக்கியமே. அதுபோலவே தென்னிந்தியாவில் உள்ள தமிழ்
அன்பர்களும் சைவப் பெரியார்களும் ஆதரிப்பார்களாயின் என் முயற்சி மிக
எளிதின் நிறைவேறும்.

நாயன்மார்களது திருவுருவப் படிமங்களையும் ஆலயங்களையும் படம்
பிடித்து வெளியிடுவது மிகுந்த கடினமான காரியம் என்பது யாவருமறிவர்.
இதுவரை ஆங்காங்குப் படங்களை எடுத்து அனுப்பிப் பேருபகாரம் புரிந்த
பெருமக்களாகிய திரு. T. B. கிருஷ்ணசாமி முதலியார் எம்.ஏ., பி.எல்.,
துடிசை கிழார் திரு. அ. சிதம்பரனார், திரு. T. S. மீனாட்சிசுந்தர
முதலியார்,
பி.ஏ., எனது அருமை நண்பர் வித்வான் திரு. A. கந்தசாமி
பிள்ளை,
கூடலூர் - திரு. தங்கவேல் பிள்ளை முதலிய பல
அன்பர்களுக்கும் எனது நன்றி உரியது.

பல்வகைப் பிறவியினும் தவஞ்செய்து பெற்றது மனிதப் பிறவி. இதன்
அருமையை அறியாது "வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்." அது
மட்டோ? "பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்!"

"நந்தவ னத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - யதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி"

என்ற வேடிக்கைபோன்ற வினயப்பாட்டு இந்நாள் உலகர்க்கு முற்றும்
பொருந்துவதாயிற்று. மனிதன் என்றாலே நினைப்பவன் - அறிவுடையவன் -
என்பது பொருள். அறிவுபெற்ற பயனாவது அறியவேண்டியதை அறிவதுதானே.
தான் வந்ததையும் போவதையும் அறிந்து நீடித்த ஊதியத்தைத் தேடுவதைத்
தவிர வேறு என்ன பயன் அறிவினால் உண்டு, அறிவினாற் பெறும் உறுதிப்
பயன்களில் நீடித்த உறுதி வீடு என்பதே என அறிவோர் துணிந்தனர். இஃது
எல்லாநாட்டு எல்லாக்காலத்து எல்லாப் பேரறிஞர்க்கும் ஒக்கும். இதனை
அடைய இறைவன்