அமைத்துள்ளேன். விசேட
வுரையிற் சொல்லாக்கம் - சொற்குறிப்பு -
தொடர்களின் அமைப்பு - இலக்கணக் குறிப்பு - சாத்திரக் குறிப்பு - முன்பின்
தொடர்பு - மேற்கோள் முதலிய பலவும் இயன்றவரை குறித்துள்ளேன்.
பாடபேதங்கள் அவ்வப்பாட்டினுரை யிறுதியிற் காணப்படும். அரிய
பாடபேதங்களை உரையினுள்ளேயே அமைத்து உரைக்குறிப்பும் தந்துள்ளேன்.
நாயன்மார்கள்
தலங்கள் - அவர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற
ஆலயங்கள் - அங்கங்குக் காணப்படும் அவர்களது பழந்திருவுருவப்
படிமங்கள் முதலியவற்றை இயன்றவரையிற் படம் பிடித்துப் பதித்துள்ளதும்
இவ்வெளியீட்டிற்காணும் ஒரு புதுமையாம். பல அன்பர்களும் இதனை
விரும்பினார்கள்; விரும்புவார்கள். பலரும் பலவகையானும் துணை செய்துதவி
வருகின்றனர். அவர்கள் யாவர்க்கும் எனது நன்றி உரியது.
இவ்வெளியீட்டினை
அச்சிடுங்கால் பெருந்துணையா யுதவுகின்றோர் பல
பெரியார்கள். அவர்களுட் டலைசிறந்து விளங்குவோர் சூரியனார்
கோயிலாதீனத்து ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகளாவர்.
அவர்கள் தமது உடல் நிலையையும், மற்றும் வசதிக் குறைகளையும் ஒரு
சிறிதும் பாராட்டாது இதன் அச்சுப் புரூப்புக்களைப் பிழைதிருத்தியும், பல
அரிய சாத்திரக் கருத்துக்களை உதவியும் வருகின்றார்கள். அவர்கள் புரூப்
மட்டும் திருத்துகின்றார்களா? அன்று! என்னையே திருத்துகின்றார்கள்.
அவர்கட்கு எஞ்ஞான்றும் எனது கடப்பாடான நன்றி உரியது. மற்றும்
அச்சிடுங்காற் பேருதவி புரிந்து வரும் என் தீட்சா குருபுத்திரராகிய சிதம்பரம்
வித்வான் த. சிவப்பிரகாசதேசிகரும், பறங்கிப்பேட்டை
வித்வான் திரு.
பெரியசாமிப் பிள்ளை, சென்னைக் கயப்பாக்கம்
சோமசுந்தர செட்டியார்
முதலிய பல பெரியார்களும் பல திருத்தங்கள் செய்து உதவி வருகின்றார்கள்.
இப்புராண உரை வெளியீட்டில் எல்லா வகையாலும் சிறிதும் சலிப்பின்றிப்
பேருதவி புரிந்துவரும் எனது ஆப்த நண்பரும், திரு. கயப்பாக்கம் சதாசிவஞ்
செட்டியாரவர்கள் உறவினரும், சீடருமாகிய திருவாளர் ஆர்.
சண்முகசுந்தரஞ் செட்டியாரவர்கட்கு எனது கடப்பாடும், நன்றியும்,
ஆசியும், உரியன.
கோவைத்
தமிழ்ச் சங்கத்தார் இவ்வெளியீட்டைத் தங்கள் சங்க
வெளியீடாக ஏற்றுப் பன்னிரண்டாவது வெளியீடாகப் பிரசுரித்துள்ளார்கள்.
மற்றும் இதற்காவனவாகிய பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.
அவர்களுக்கு எனது நன்றி உரியது.
சாது
அச்சுக்கூடத் தலைவரவர்கள் இவ்வெளியீட்டில் செய்த -
செய்கின்ற - பேருபகாரம் போற்றத்தகுந்ததாம். எனது தாமதங்களையும்,
மற்றும் அவர்கள் பால் நான் செய்யும் பற்பல இன்னல்களையும் ஒரு சிறிதும்
பாராட்டாது, அவர்கள் எந்நாளும் இவ்வெளியீட்டைச் சோர்வுறாது
அச்சேற்றிவரும் உதவியை நான் என்றும் மறவேன். சென்னை போடோ
எம்போரியம் காரியஸ்தர் பற்பல புகைப்படங்கள் எடுத்து உதவினார்கள்.
அவர்களுக்கும் எனது நன்றி உரியது.
எனது
இச்சிறு முயற்சியினையும் பாராட்டி ஊக்கமளித்து மதிப்புரை
தந்துதவின பற்பல பெரியார்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்பியாரூரது
முதல் யாத்திரைக்குத் தலப்படம் (Map) வரைந்தும் -
நாயன்மார்களைப்பற்றிய கல்வெட்டுக்களைத் தந்தும் உபகரித்தவர் எனது
ஆப்த நண்பரும், கோவைத் தமிழ்ச் சங்க அமைச்சரும் ஆகிய இராவ்சாகிப்
திருவாளர் கோவை சி. எம். இராமச்சந்திரன் செட்டியார்,
பி.ஏ.,
பி.எல்., எப்.ஆர்.ஜி.எஸ். அவர்கள் இதுமட்டுமா? இவ்வுரையிற் சரித
ஆராய்ச்சிப் பகுதியில் அங்கங்கே காணும் பொருள்களிற் பற்பலவும்
அவர்களுடன் நான் அளவளாவியதன் பயனாற் போந்தன என்றே
சொல்வேன். இது போலவே இனியும் இவ்வுரை முற்றும் வரை அவர் தமதரிய
சரித ஆராய்ச்சியிற் கண்ட உண்மைகளை உதவிவருவதாக என்று
கொண்டார்கள். எதிர்காலத்துச் செய்யும் அவ்வுதவிபற்றியும் இப்போதே
அவர்கட்கு எனது நன்றி செலுத்துகின்றேன்.
|