80

தார் பதின்மூவர் என்று இப்புராணத்திற் போற்றப்பட்டோரின் மரபு
வகுக்கப் பெறுகின்றது.

இனி, இப்பெரியார் திருக்கூட்டத்திலே தமிழர் சில பேர்; மலையாளர்
சிலபேர்; தெலுங்கர் சிலபேர்; மற்றுள்ள தேசத்தோர் சிலர்; முற்காலத்தவர்
சிலர்; இப்போதுள்ளவர் சிலர்; இனி எதிர்காலத்து வருவோர் சிலர் என்று
அறியப்படும். இனி, வழிபாட்டு வகையாலே திருஞானசம்பந்த நாயனார்
முதற், சோமாசிமாற நாயனார்வரைப் பத்தொன்பது பேர் குருவழிபாட்டாலும்,
எறிபத்தர் முதலாகக் கோச்செங்கட் சோழனாரீறாக முப்பதுபேர் சிவலிங்க
வழிபாட்டாலும், திருநீல கண்டனார் முதல் நேசர் வரைப் பத்து அடியாரது
திருவேட வழிபாட்டாலும் முத்தியடைந்தனர் என்றறியக் கிடக்கின்றது.

இனித், தமிழ் வகையானே திருஞானசம்பந்த சுவாமிகள், அப்பர்
சுவாமிகள், காரைக்காலம்மையார் இம்மூவர்கள் இயற்றமிழும் இசைத்தமிழும்
வல்லவர்கள்; திருநாளைப்போவார், ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர்,
பரமனையேபாடுவார் என்ற இவர்கள் இசைத்தமிழ் வல்லோர்; ஐயடிகள்,
திருமூலர், காரியார், பொய்யடிமையில்லாத புலவர், கழறிற்றறிவார்
என்னுமிவர்கள் இயற்றமிழ் வல்லோராவர்.

இனி, ஆச்சிரம வகையானே, திருநீலகண்டர், இயற்பகையார்
முதலியோர் இல்லறத்தினின்றே பேரின்ப முத்தி பெற்றோர்; மூர்த்தியாரும்,
அப்பர் சுவாமிகளும் துறவறத்தினின்று பேறடைந்தோர்; சண்டேசர்
பிரமசாரிகள்.

இனி, அடியார்களுடன் சார அணைந்தமையால் இச்சார்புபற்றி
முத்தியடைந்தோர் பல்லோர். திருஞானசம்பந்த சுவாமிகளது
திருமணத்திலே சேவித்து உடனே முத்தி பெற்றாரும், சேரரும்
நம்பியாரூரரும் கயிலைக்கெழுந்தருளும்போது அன்பினால் உடல்
வீழ்ந்து, வீர யாக்கைகொண்டு அவர்களைச் சாரச் சென்றணைந்தாரும்
முதலிய எண்ணிறந்தோர் வரலாறு இதனைப் புலப்படுத்தும்.
சிவனடியாருடன் பகைத்து அவராற் புனிதமாக்கப்பட்டு முத்தி பெற்றோரும் பலர். அவர் களாவர் சண்டேசராற் றண்டிக்கப்பட்டுக் குற்ற நீங்கிய எச்சதத்தன் என்னும் அவர் பிதா, கோட்புலியாராற் றண்டிக்கப்பெற்ற சுற்றத்தார் முதலியோராம். சிவனடியார்களைப் பகைத்து
நரகத்திலடைந்தோர் மூர்த்திநாயனாரது திருத்தொண்டினுக்கு இடையூறு
செய்த வடுகக் கருநாட மன்னன் முதலியோராம். இவ்வாறு இப்புராண
சரிதங்களைப் பிரித்துப் புகல வரிதாம். தனியடியார்களும் தொகையடியார்களுமாகித் திருநாவலுரர் காலத்து முன்னும்
பின்னும் நின்று சிவனடியடைந்த அடியார்கள் எண்ணிறந்தபேர்.
இவர்கள் யாவரும் உலகர்க்கு வழிகாட்டிய உத்தமர்களாவார்.
இவ்விரிவுகளை உமாபதியார் அருளிய திருத்தொண்டர்புராண வரலாற்றிற்
காண்க.

முன்னை வரலாறும் முடிபும்

இவர்கள் கதையினை உமாதேவியாருக்குப் பரமசிவன் உபதேசித்த
வரலாறு சிவரகசியத்து ஒன்பதாம் அமிசத்திலே கேட்கப்படும்.
திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் நம்பியாண்டார்நம்பிகளுக்குத்
தெருட்டியருளினர். உபமன்னியமுனிவர் பல பெருமுனிவர்களுக்கு
எடுத்துச் சொன்னார். இவ்வாறு திருக்கைலாய பரம் பரையிலே வந்த,
உலகம்போற்றும் உத்தமர்களது சரிதமாகிய இப்புராணத்தைப் பயின்று
உலகம் இம்மை மறுமை வீட்டின்பங்களை யடைந்துய்வதாக.
இப்புராணம் காட்டக் காண்பதன்றித் தேவார முதலிய
அருட்டிருவாக்குக்கள் பலவற்றிற்கும் நாம் உள்ளுறையும் பொருளும்
காண்பதரிது. இக்கண்கொண்டு நாம் அவற்றையும் ஓதி உய்வோமாக.