இப்பெரும்பணி தொடங்கி இப்போது 15 ஆண்டுகள் சென்றன. யாக்கை நிலையாமை என்ற நீதிநூற் பகுதி எப்போதும் நினைவில் வருகின்றது. ஆயினும் இப்புராணத்துள் எஞ்சிய பகுதிகளையும் விரைவில் அச்சியற்றவும் புராண உரையினை முழுதும் கண்டு பெருவிழாச் செய்து வணங்கும் பெரும் பேற்றினைப் பெறவும் ஆயுளும் அறிவும் ஆற்றலும் அடியேனுக்கு அருளுவார் என்றே நம்பி இறைஞ்சி அவரது பொன்னார் திருவடிகளின் விண்ணப்பஞ் செய்கின்றேன்.

"அருளா தொழிந்தா லடியேனை யஞ்சே லென்பா ராரிங்குப்
பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா"
"நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே".

 

கோவை
சேக்கிழார் நிலையம்,
1-6-1950

அடியார்கடியேன்,
C.K.சுப்பிரமணிய முதலியார்,
பதிப்பு - உரையாசிரியன்.