சைவத்திருவாளர் S. முருகேச முதலியார், B.A., B.A.L., அவர்கள் மனமுவந்து செய்து உதவினர். கோயிலில் நடைபெறும் சிறப்புக்களையும், நகர்வலத்தின் வைபவத்தையும், பாலையிற் பாராட்டற் கூட்ட அமைப்புக்களையும், ஆதீனச் சார்பில் வைத்தீசுவரன் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத்.சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகளும், ஆச்சாபுரம் கோயில்விசாரணை திரு.வைத்தியலிங்கம் பிள்ளை அவர்களும் நேரில் கண்காணித்து எவ்விதக் குறைவுமில்லாமல் இயற்றுவித்தனர். பாராட்டற் கூட்டம் திருக்கோயிலின் முன், வடகிழக்கே உள்ள ஸ்ரீ ஞானசம்பந்தர் மடத்திற்காக வகுக்கப்பட்ட இடத்தில் அமைத்த புதிய அலங்காரக் கொட்டகையில் மாலை 40 மணிக்குத் தொடங்கிற்று. அங்கே ஸ்ரீ பாலசம்பந்தமூர்த்திகள் நாயன்மார் மூவருடன் வெளிப்பட எழுந்தருளியிருந்தனர். ஸ்ரீ சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் தலைமைதாங்கி முன்னுரை, அணிந்துரை, முடிப்புரைகளைச் சிறப்பாக வகுத்தருளினர். ஓதுவார் மூர்த்திகள் தேவார பாராயணம் செய்தனர். சீகாழிக் கல்விக் கழகத்தார் அச்சிட்ட வரவேற்புரையைச் சீகாழி மிராசுதாரும் அன்பருமாகிய திரு.சொ.சீனிவாச முதலியார் அவர்கள் வாசித்தனர். தருமையாதீனப் புலவர் ஆரணி வித்வான் திரு.முத்து. சு. மாணிக்க வாசக முதலியார் அவர்கள் உரையாசிரியருக்கு வாழ்த்துப் பாமாலை நவமணிமாலையாகப் பாடி வாசித்தளித்தனர். சீகாழிப் பெருநிலக் கிழார் திரு.S. சீனிவாச முதலியார் அவர்களும், திரு.துடிசைக்கிழார் A.சிதம்பரனார் அவர்களும், சிதம்பரம் தேவார பாடசாலை அதிபர் திரு.சின்னையா முதலியார் அவர்களும், சிதம்பரம் பாடசாலைத் தேவார ஆசிரியர் ஸ்ரீமத்.S. இராமலிங்க ஓதுவார் மூர்த்திகளும் உரையாசிரியரையும் உரை நயங்களையும் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். உரையாசிரியர் உரைநிறைவு பற்றித் திருவருளால் தமக்குக் கிடைத்த பேற்றினைப் பற்றிப் பேசினர். தருமை ஆதீன மகா சந்நிதானங்களின் ஆசியும்திருவருட் பிரசாதங்களும் உரையாசிரியருக்குத் தம்பிரான் சுவாமிகளால் வழங்கப்பட்டன. இரவு 8 மணி அளவில் மங்கல வாழ்த்துடன் சபை நிறைவாயிற்று. அதன்மேல் திருக்கல்யாண விழாவும், நகர்வலமும் நிகழ்ந்தன. அதிகாலை 5 மணியளவில் மூன்று நாயன்மார்களுடன் திருஞானசம்பந்த நாயனார் திருமணக் கோலத்துடன் காதலியைக் கைப்பற்றிக் கொண்டு சிவச்சோதியுட்கலக்கும் அருட்காட்சி நிகழ்ந்ததனை அன்பர்கள் யாவரும் கண்டு தொழுது பெரும்பேறு பெற்றனர்.
திருவிழாவை ஆசிபூர்வமான ஆணை தந்து அருளிய தருமை ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானங்களுக்கும், உடனிருந்து நடத்திக் கொடுத்த ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகளுக்கும், கட்டளை விசாதணை திரு.வைத்தியலிங்கம் பிள்ளை அவர்களுக்கும், வரவேற்புத் தலைவராக நின்று உபசரணை செய்த ஆச்சாபுரம் திரு.S. முருகேச முதலியார், B.A., B.L., அவர்களுக்கும், படங்கள் எடுத்து உதவிய சிதம்பரம் தேவார பாடசாலை அதிபர் திரு.சின்னையா முதலியார் அவர்களுக்கும், தேவார ஆசிரியர் மாணவ மாணவிகளுக்கும், வாழ்த்துப் பாமாலையும் வரவேற்புரையும் பாராட்டுரைகளும் வழங்கிய எல்லாப் புலவர்களுக்கும் , மற்றும் மனமொழி மெய்களால் இவ்விழா சிறப்புற நிகழச் செய்து ஊக்கமளித்த எல்லாப் பெருமக்களுக்கும் உரையாசிரியரால் வணக்கமும் நன்றியும் செலுத்தப்பட்டது.
இவ்வளவும் உண்ணின் றியக்கியருளிய இறைவர் திருவருளுக்கும் திருஞான சம்பந்த நாயனாரது திருவடித் தாமரைகளுக்கும் எனது வணக்கத்தைச் செலுத்துகின்றேன். ஒன்றுக்கும் பற்றாத நாயினேனையும் தனது பேரருட் பெருந் தொண்டர் சரிதங்களின் உரை எழுதி வெளியிடவும் சிவபெருமான் தண்ணருள் சுரந்தருளினர்.