சிவமயம்

ஆறாவது பகுதியின் முன்னுரை

1. ஐந்தாம் பகுதி 1-6-50-ல் திருவருட் டுணைகொண்டு ஆச்சாள்புரம் என்னும் திருநல்லூர்ப்பெருமணப் பதியில் வெளியாயிற்று. அத் திருப்பதியிலேதான் திருஞானசம்பந்தப் பெருமான் திருமணத்திலே போதநிலை முடிந்த வழி இறைவருடன் ஒன்றி உடனாகிய திருவடிப் பேறு பெற்றனர். அத்திருநாளிலே அவரது சரித நிறைவாகிய ஐந்தாம் பகுதி வெளியிடப் பெற்றது திருவருட் சம்மதமாகிய பெருமை. அப்போது மேலுள்ள பகுதிகள் விரைவில் வெளிவரத் திருவருள் கூட்டுக என்று பிரார்த்தித்தேன். எண்ணியார் திண்ணியராகப் பெறினன்றே எண்ணியவற்றை எண்ணியாங்கு முற்றுப் பெறுதல் கைகூடும். அடியேன் அவ்வாறு எந்தத் திண்மையும் பெற்றேனல்லேன். ஆதலின் அந்நாளினின்று இப்போது 2 ஆண்டுகளின் மேலாகிய கால எல்லையில் இந்த ஆறாம்பகுதியை அச்சு நிறைவேற்றி வெளியிடும் பேறு பெறுகின்றேன். VII பகுதியுடன் புராண உரை வெளியீடு நிறைவேறும். இன்னும் 500 திருப்பாட்டுக்களே அதனுள் வெளிவர உள்ளன. அப்பகுதியுள்ளும் இப்போது 100 திருப்பாட்டுக்கள் வரை அச்சேறியுள்ளன. ஆதலின் எஞ்சியவையும் அச்சேறி இன்னும் ஓராண்டளவில் VII பகுதியுடன் புராண உரைத் திருப்பணி வெளியீடு நிறைவு கண்டு களிக்கத் திருவருளும் அன்பர்களாசியும் துணை நிற்பனவாக.
2. இப்பகுதியிற் பெருந் துணையாக நின்றன, திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் ஸ்ரீமத் அருணந்தித் தம்பிரான் சுவாமிகளின் அருட்பெரும் கொடையும், என் அரிய உரிய நண்பர் Dr.சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் B. A. B. L. Kt. C. I. E. அவர்கள் ஆதரவினால் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாரின் பெருநன்கொடையும் ஆகும். இவை பற்றி எனது மனமார்ந்த நன்றியை முன்னரே அவ்வப்போதே தெரிவித்துள்ளேன்.
3. இப்பகுதியில் வெளிவந்துள்ள படங்களுள் திருவெஞ்சமாக் கூடற் படங்களை எடுத்துதவியவர் எனது உறவினராகிய அன்பர், அரவக்குறிச்சி ரிவினியூ இன்ஸ்பெக்டர் திரு. C. S. கண்ணாயிர முதலியார்ஆவார். அந்தப் படங்கள் எடுக்கும்போது சடுதியில் நிகழ்ந்த தெய்விக அற்புதமாகிய, சிற்றாற்றின் மழை நீர்வெள்ளப் பெருக்கினையும், அஃது ஆசாரிய பெருமானாம் ஆளுடைய நம்பிகளது அத்தலத் தேவார உண்மையினை உலகறியச் செய்த பெருமையினையும் பற்றி முன்னமே எனது அறிவிப்பில் வெளியிட்டிருக்கிறேன். திருப்பாண்டிக் கொடுமுடிப் படங்களை அன்புடன் எடுத்துதவியவர் எனது பேரன்பர் ஈரோடு இளைஞர் கல்விச் சங்கத் தலைவர் திரு. R. P. தங்கவேலு அவர்கள். திருப்பேரூர்ப் படங்களைப் பிளாக்குகளாகவே அக்கோயில் அதிகாரிகள் உதவினார்கள். ஈழநாட்டுத் திருக்கோண மலைத்திருக்கோயில் முன்னிருந்த அமைப்பினைக் காட்டும் பாடம், இலங்கை அரசாங்கத்தில் Chief Translator in Tamil ஆக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் எனது பேரன்பர்